இளம் கன்னட இயக்குநர் நவீன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 36. அவரின் மரணத்தால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அப்பு வெங்கடேஷ் நடித்த ஒன்டே படம் மூலம் கன்னட திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் நவீன். அந்த படம் கடந்த 2011ம் ஆண்டு ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது.
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் மாண்டியாவை சேர்ந்த நவீனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். 36 வயது நவீன் இறந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நவீனின் உடல் அவரின் சொந்த ஊரான மாண்டியாவில் தகனம் செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டில் கன்னட திரையலகில் இது மூன்றாவது மரணம் ஆகும்.
முன்னதாக பிரபல போஸ்டர் வடிவமைப்பாளரும், இயக்குநருமான மஸ்தான் கடந்த மாதம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். மேலும் நடிகரும், தயாரிப்பாளருமான டாக்டர் டிஎஸ் மஞ்சுநாத்தும் ஏப்ரல் மாதம் கொரோனாவால் மரணம் அடைந்தார்.
கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்தியர்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். கடந்த ஒரு வார காலமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டிக் கொண்டிருக்கிறது.
பெங்களூரில் கடந்த சில நாட்களாக தினசரி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்கள்.
தமிழ் திரையுலகில் கடந்த வாரம் மட்டும் 4 நாட்களில் இயக்குநர்கள் தாமிரா, கே.வி. ஆனந்த் ஆகியோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.