தேர்தல் முடிவுகளில் முக்கிய விஐபிக்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். சீமான், டிடிவி தினகரன், அண்ணாமலை, குஷ்பு என எதிர்பார்க்கப்பட்ட பலரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். போடி தொகுதியில் ஓபிஎஸ் திடீர் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் 234 தொகுதிகளில் முன்னிலை நிலவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. முன்னிலை, பின்னிலை மாறி மாறி வந்தாலும் சிலர் மிகவும் பின்தங்கியுள்ளனர்.
234 தொகுதிகளில் திமுக கூட்டணி 131 இடங்களிலும், அதிமுக கூட்டணி 102 இடங்களிலும், மநீம 1 தொகுதியிலும் முன்னணியில் உள்ளன. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பின்னடைவைச் சந்தித்த நிலையில் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளார்.
ஆனாலும், மிகப்பெரும் விஐபிக்கள் இந்தத் தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அமைச்சர் கடம்பூர் ராஜுவைவிட குறைவான வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார். துறைமுகத்தில் சேகர்பாபு பின்தங்கியுள்ளார்.
பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் பின்தங்கியுள்ளார், ஆயிரம் விளக்கு நட்சத்திர வேட்பாளர் குஷ்பு பின்தங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் பின்தங்கியுள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் தொடர்ந்து பின்தங்கி வருகிறார். திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் பின்னடைவில் உள்ளார். முன்னாள் அமைச்சர் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
தேமுதிக இல்லாமல் யாரும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது, இது கேப்டன் தொகுதி எனப் போட்டியிட்ட பிரேமலதா, விருத்தாச்சலம் தொகுதியில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
பாஜகவில் பெரிதாகக் காட்டப்பட்ட விஆர்எஸ் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அரவக்குறிச்சியில் பின்னடைவில் உள்ளார். அமைச்சர்கள் ஓபிஎஸ், காமராஜ், ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி நடராஜன் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
சைதை துரைசாமி, நட்ராஜ், ஸ்ரீபிரியா, என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.