இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திவரும் உயிரிழப்புகள் குறித்த செய்திகளைக் கேட்டுக் கேட்டு கடும் துயரத்தில் இருக்கும் மனங்களை சற்றே தேற்றும் வண்ணம் ஒரு செய்தி வந்திருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 105 வயது முதியவரும், அவரின் 95 வயது மனைவியும் அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கின்றனர்.
105 வயதான தேனு சாவன் மற்றும் 95 வயதான மோட்டாபாய் ஆகிய இருவரும் மகாராஷ்டிராவில் உள்ள கட்டாகன் டண்டா என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி தேனு சாவன் உட்பட அவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்றுவலியால் தேனு சவானும், மோட்டோபாயும் பாதிக்கப்பட்டனர்.
இனிமேலும் பாதிக்கப்பட்டுள்ள தன் பெற்றோரை வீட்டிலேயே வைத்துக்கொள்ளக் கூடாது என்று முடிவு செய்த இவர்களின் மகன் சுரேஷ் சாவன் இவர்களை மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்திருக்கிறார். ஆனால், இத்தனை வயதுக்கு மேல் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்பவர்கள் நல்லபடியாக வீடு திரும்ப வாய்ப்பில்லை என்று ஊர் மக்கள் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், சுரேஷ் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. உடனடியாகத் தன்னுடைய பெற்றோரை லத்தூர் என்கிற இடத்தில் உள்ள விலாஸ் ராவ் தேஷ்முக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.
அறிகுறிகள் தென்பட்ட உடனேயே காலம் தாழ்த்தாமல் மருத்துவமனையில் சேர்த்ததால் தம்பதி இருவருக்கும் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கிறது.
மொத்தம் ஒன்பது நாள்கள் இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்திருக்கின்றனர். சுரேஷ் ஒவ்வொரு நாளும் தன்னுடைய பெற்றோரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்று ஒரு கண்ணாடி வழியாக அவர்களுடன் பேசுவாராம்.
“நாங்கள் எப்போது வீட்டுக்கு வருவோம்?” என்பதே அவர்களது கேள்வியாக இருக்கும். நானும் `நாளைக்குப் போய்விடலாம்’ என்று ஒவ்வொரு நாளும் அவர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பேன்” என்று நினைவுகளை அசைபோடுகிறார் சுரேஷ்.
`காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொண்டதும், இதிலிருந்து நாம் மீண்டுவிடுவோம் என்கிற நம்பிக்கையுமே இந்த முதிய தம்பதியை கொரோனாவிலிருந்து வெற்றிகரமாக மீட்டுக் கொண்டுவந்ததாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.
`என் தந்தை சிறு வயது முதலே மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவார். அதுமட்டுமல்லாமல் எங்கள் கிராமத்தையொட்டியுள்ள வறட்சி பாதித்த பகுதிகளில் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். எங்கள் கிராமத்தில் பள்ளி மற்றும் கிணறு ஒன்றைக் கட்டுவதற்காகத் தன்னுடைய நிலத்தை தானமாகக் கொடுத்தவர் என் அப்பா” என்று சொல்கிற சுரேஷ், இத்தனை வயதுக்குப் பிறகும் கொரோனாவை வெற்றிகொண்டு இருவரும் நல்லபடியாக வீடு திரும்பியதற்கு இவர்கள் செய்த நல்ல காரியங்களே காரணம் என்று ஊர்மக்கள் தங்கள் பெற்றோரைப் போற்றுவதாகவும் பெருமிதத்துடன் கூறுகிறார்.