நடிகர் அருண் விஜய்யின் மாமனாரும், தயாரிப்பாளருமான என் எஸ் மோகன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக வளர்ந்து வருபவர் நடிகர் அருண் விஜய். கடந்த 1995 ஆம் ஆண்டு திரைக்கு வந்த முறை மாப்பிள்ளை படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.
ஆனால், எந்தப் படமும் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. அப்படியிருக்கும் போது அஜித்துக்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்தார். இதன் மூலமாக புதிய அவதாரமும் எடுத்து தன்னை ஒரு சிறந்த நடிகராகவும் மீண்டும் சினிமாவில் காட்டிக் கொண்டார்.தற்போது நல்ல கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அக்னி சிறகுகள், பாக்ஷர், சினம் மற்றும் பார்டர் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், அருண் விஜய்யின் மாமனாரும், சினிமா படங்கள் தயாரிப்பாளருமான என் எஸ் மோகன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 68. அருண் விஜய்யின் நடிப்பில் வந்த மாஞ்சா வேலு, வா டீல், மலை மலை, தடையறத் தாக்க, ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
அண்மைகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். ஆனால், என் எஸ் மோகனின் மறைவு குறித்து அருண் விஜய் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், அருண் விஜய்யின் ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் என் எஸ் மோகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதே போன்று சமுத்திரக்கனி மற்றும் ரம்யா பாண்டியனை வைத்து ஆண் தேவதை பட த்தை இயக்கிய இயக்குநர் தாமிரா கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நேற்று அசோக் பில்லரில் உள்ள மாயா மருத்துவமனையில் உயிரிழந்தார். சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருவது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.