விஜய்யின் தளபதி 65 படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
கொரோனாவின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டாம் அலையில் இந்தியாவில் ஏகப்பட்ட பேர் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைதளங்கள் பக்கம் சென்றால் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திரையுலக பிரபலங்கள் தெரிவிப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பூஜா ஹெக்டே தன் ட்வீட்டில் கூறியிருப்பதாவது, எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ் என்று வந்திருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதையடுத்து வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.அண்மையில் என்னை சந்தித்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. நான் குணமாகி வருகிறேன். தயவு செய்து வீட்டில் இருங்கள், பத்திரமாக இருங்கள் என தெரிவித்துள்ளார். பூஜாவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளனர்.
கெரியரை பொறுத்த வரை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 65 படத்தின் ஹீரோயின் பூஜா தான். சென்னையில் பூஜையை நடத்திவிட்டு முதல் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஜார்ஜியா சென்றது. ஜார்ஜியா ஷெட்யூலை முடித்துக் கொண்டு விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று சென்னை திரும்பினார்கள். இதையடுத்து சென்னையில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். தளபதி 65 படத்தில் நடிக்க பூஜாவுக்கு ரூ. 3 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அவர் கை நிறைய படங்கள் வைத்திருந்தாலும் விஜய் படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று தன் டேட்ஸை அட்ஜஸ்ட் செய்து கொடுத்திருக்கிறாராம்.
தளபதி 65 படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் அவர் பிரபாஸுடன் சேர்ந்து ராதே ஷ்யாம் படத்தில் நடித்துள்ளார். மேலும் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்திலும் நடித்திருக்கிறார். இது தவிர்த்து ரன்வீர் சிங்கின் சர்கஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.