கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனை, குறித்த நாளில் பாதுகாப்பு கவச உடை அணிந்து இளம்பெண் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு கேரளாவில் அரங்கேறியுள்ளது.
ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த சரத்மோன் என்பவருக்கும், அபிராமி என்பவருக்கும் 25ஆம் திகதி திருமணம் செய்ய கடந்த ஆண்டே இரு வீட்டாரின் பெற்றோர் முடிவு செய்திருந்தனர். இதற்காக, வெளிநாட்டில் பணியாற்றி வந்த சரத்மோன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து, அரசின் விதிகளுக்குட்பட்டு, வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.
இருப்பினும், அவருக்கும், அவரது தாயார் ஜிஜிமொல்லுக்கும் கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரும் ஆலப்புழாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே, குறித்த நாளில் (25) சரத்மோன் மற்றும் அபிராமிக்கும் திருமணம் நடத்த வேண்டும் என்று உறுதியாக இருந்த இரு வீட்டாரும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரினர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்ட நிலையில், கொரோனா பாதுகாப்பு கவச உடையுடன் (பிபிஇ) நேற்று சரத்மோன் சிகிச்சை பெற்று வரும் ஆலப்புழாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அபிராமி சென்றார். அங்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் சரத்மோனை அபிராமி திருமணம் செய்துகொண்டார்.
கொரோனா தொற்றையும் கடந்து திருமண பந்தத்தில் இணைந்த சரத்மோன் – அபிராமி தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.