60 வயதைத் தாண்டிய பின்னரும் தினமும் 4 கி.மீ நடந்து வீடுகளுக்கே சென்று புத்தகங்கள் படிக்கக் கொடுக்கும் பெண் நூலகரின் செயல் மெய்சிலிர்க்க வைக்கிறது.
இவர் பெயர் ராதாமணி. இவருக்கு வயது 64. கேரளா வயநாடு மாவட்டத்தில் மோதக்கரை பகுதியில் நூலகராக வேலை பார்த்தவர். தினமும் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, வீடு தேடி மக்களுக்குப் புத்தகங்கள் படிக்கக் கொடுப்பது, திரும்ப வாங்கி வருவது தான் இவருடைய தனிச்சிறப்பு. அதனால் அந்த பகுதி மக்கள் அவரை நடமாடும் நூலகர் என்றே அழைக்கிறார்கள். மோதக்கரை வெள்ளமுண்டா பகுதி, மலையை ஒட்டிய அடர்ந்த காடுகள் கொண்ட பழங்குடி கிராமம்.
ஊர் நூலகத்தில் கிட்டதட்ட 11 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் படிக்கத் தான் யாருமில்லை. அந்த பகுதி மக்கள் வீட்டு வேலைகள், வயல் மற்றும் விவசாய வேலைகளில் ஈடுபடுவதால் நூகங்களுக்குச் செல்லும் பழக்கமும் நேரமும் அவர்களுக்குக் கிடையாது. இதை புரிந்து கொண்ட ராதாமணி மக்கள் வராமல் போனால் என்ன, நான் அவர்களிடம் செல்கிறேன் என்று சொல்லி, தினமும் புத்தகங்களை 4 கி.மீ சுமந்து சென்று மக்களிடம் சேர்ப்பது என முடிவு செய்தார்.
கேரள லைப்ரரி கவுன்சில் விதிமுறைப்படி, புத்தகம் வாங்குவோர் பற்றிய விவரங்கள் கொண்ட பதிவேட்டை தயார் செய்து வைத்துக் கொண்டு, ஒரு கட்டைப் பை நிறைய புத்தகங்களோடு தினமும் மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று விடுவார். இவரிடம் நாவல், சிறுகதை, வரலாறு, அரசியல், சினிமா சம்பந்தப்பட்ட எல்லா புத்தகங்களும் கிடைக்கும்.
ஒரு கட்டைப் பையில் 20-25 புத்தகங்கள் வரை எடுத்துச் செல்வார். ஒரு வீட்டுக்கு 2 புத்தகங்கள். எட்டு நாட்களில் அதைப் படித்துவிட்டு திருப்பித் தர வேண்டும். இதுதான் விதிமுறை. லைப்ரரியில் உறுப்பினராக சேருவதற்கு 25 ரூபாய் செலுத்த வேண்டும். அதோடு மாத சந்தா வெறும் 5 ரூபாய் செலுத்தினால் போதும். புத்தகம் வீடு தேடி வரும்.
சிறுவயதில் தன்னுடைய தாத்தாவுக்கு புத்தகங்கள் படித்துக் காட்டியயதால், வாசிப்பு மீது ஆர்வம் வந்ததாக கூறும் ராதாமணி, தனக்கு லைப்ரரியில் புத்தகங்களோடு வாழும் வேலை கிடைத்ததும், தன்னால் முடிந்தவரை பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் அவர்களுடைய குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்ட வேலை செய்வதும் தனக்கு மகிழ்வாக இருப்பதாகக் கூறுகிறார்.