இந்தியாவில் 14 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான போட்டிகள் தற்போது நடக்கின்றன. இதன் முதல் பகுதி ஆட்டங்கள் மும்பையின் வான்கடே மைதானத்திலும் சென்னையில் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திலும் நடைபெறுகின்றன. இதில் சென்னை மைதானத்தின் ஆடுகளம் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. சென்னை மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை என்பதால் போட்டிகள் அதிக ரன்கள் குவிக்க முடியாமல் போட்டி சுவாரஸ்யமற்றதாக உள்ளதாகவும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதற்கிடையில், இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக பாதியிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வெளியேறினார். இவர் சென்னை ஆடுகளம் குறித்து தற்போது கடும் விமர்சனத்தை டிவிட்டர் மூலம் பதிவு செய்துள்ளார் அதில், “நடப்பு ஐபிஎல் தொடரில் ஆடுகளம் இதற்கு மேல் மோசமாக போகாது என நம்புகிறேன் ஏன் என்றால் 160 அல்லது 170 என்ற ஸ்கோர் 130 அல்லது 140 என்ற அளவு தொடர் சொல்ல செல்ல மாறிவிடக்கூடாது. ஏன் என்றால் இந்த ஆடுகளம் குப்பை போன்றது” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக சென்னை ஆடுகளம் என ஸ்டோக்ஸ் குறிப்பிடாத நிலையிலும் சென்னை சேப்பாக்க மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ், மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி 130 ரன்கள் என்ற அளவில் தான் இருந்ததை குறிப்பிடும் விதமாக ஸ்டோக்ஸ் கருத்து இருந்தது.