மூக்கில் ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில் 13 நாட்கள் மரணத்தோடு போராடினேன் என்று கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து மீண்டது குறித்து தமிழருவி மணியன் விளக்கம் அளித்துள்ளார்.
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், ‘கொரோனாவின் கொடுமையில் இருந்து மீண்டவனின் வாக்குமூலம்’ என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தமிழகத்தில் வேகமாக பரவத் தொடங்கியதும் கடந்த ஆண்டு மார்ச் முதல் ஓராண்டு நான் வீட்டை விட்டு வெளியே வராமல் மிகுந்த பாதுகாப்புடன் இருந்தேன். இந்த ஆண்டு ஜனவரி மாத முடிவில் கொரோனாவின் தீவிரம் குறைந்திருந்த நிலையில் ஈரோடு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கொரோனா தொற்று ஏற்பட்டது. இதய அறுவை சிகிச்சையும் வால்வு மாற்றமும் செய்துகொண்ட என் மனைவிக்கும் என்னால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பொருளாதார வசதியற்ற நாங்கள் ஓர் அரசு ஆஸ்பத்திரியில் தஞ்சமடைந்தோம்.
பரிசோதனைக்கு பின்பு எங்களுக்கு ஆரம்ப நிலையில்தான் பாதிப்பு என்று சொல்லி, சில மாத்திரைகளை வழங்கி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அவர்கள் பரிந்துரையை வேதமாக ஏற்று 10 நாட்கள் இருந்ததில் நோய் முற்றிவிட்டது. இதையடுத்து சித்த மருத்துவர் வீரபாபு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். மூக்கில் ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில் 13 நாட்கள் மரணத்தோடு போராடினேன். மரணம் என் கண் முன்னால் நிதர்சனமாக நிழலாடியது. யாரையும் களப் பலியாக்க விரும்பாமல் தேர்தல் களத்திலிருந்து ரஜினிகாந்த் விலகி நின்றது எவ்வளவு விவேகமான முடிவு என்பது தெளிவாகப் புரிந்தது. அவர் மீது அன்றுவரை எனக்கிருந்த ஆழ்ந்த வருத்தமும் அகன்றது. நான் பிழைக்கமுடியும் என்ற நம்பிக்கையை முற்றாக இழந்துவிட்டேன்.
வீரபாபு மற்றும் அவருடைய குழுவினரின் தொடர் சிகிச்சையால் இரண்டு வாரங்களுக்குப் பின்பு நிமோனியா காய்ச்சல் தணிந்து, நான் பூரணமாக நலம் பெற்றேன். என்னைச் சாவின் கொடிய பிடியிலிருந்து காப்பாற்றிக் கரை சேர்த்தது சித்த மருத்துவம்தான். ஆனால் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஓமியோபதி ஆகியவற்றிற்கு அரசின் ஒத்துழைப்பு இல்லை என்பதுதான் அவலம். காட்டுத்தீயைப் போல் கொரோனா பரவிவரும் நிலையில் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் போதிய இடமில்லாத சூழலில் நம் மண் சார்ந்த சிகிச்சைகளின் பக்கம் அரசு முகம் திருப்பவேண்டும். இனி வருங்காலங்களில் சித்த, ஆயுர்வேத மருத்துவம் பல்கிப்பெருக அரசு போதிய நிதி ஒதுக்கவேண்டும். சென்னை மாநகராட்சி உடனடியாக சித்த மருத்துவமனைகளின் சேவையைப் பெருமளவில் பயன்படுத்த முன் வரவேண்டும்.
ஆரம்ப நிலையில் கவனிக்கத் தவறினால் கொரோனா நம்மை கொன்றுவிடும். வீடு திரும்பி ஒரு மாதமாகியும் நான் இன்னும் பழைய உடல் நிலையைப் பெறவில்லை. தளர்ச்சியிலிருந்து இன்னும் முற்றாக விடுபடவில்லை. வருமுன் காப்பதே விவேகம். தடுப்பூசியைப் பயன்படுத்த தயங்காதீர்கள். முககவசம் அணியாமல் எங்கும் போகாதீர்கள். சமூக இடைவெளி மிகவும் முக்கியம். யாரோடும் செல்பி எடுக்க முயலாதீர்கள். ஒவ்வொரு நாளும் வீட்டில் ஆவி பிடிக்கத் தவறாதீர்கள். அவசியமின்றி வெளியில் செல்லாதீர்கள். கொரோனா இவ்வளவு வேகமாக பரவியதற்கு அரசியல்வாதிகள் நடத்திய தேர்தல் பிரசாரங்களே முக்கிய காரணம். மக்கள் நலனுக்காக எந்த அரசியல் கட்சியும், தலைவர்களும் இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறது கொரோனா. நமக்கு நாமின்றி நல்ல துணை யாருமில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.