கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் சுந்தர் சி. தற்போது வீடு திரும்பிவிட்டார். இதையடுத்து தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் குஷ்பு.
கொரோனா வைரஸின் இரண்டாம் அலையில் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி.க்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன அவர் நேராக வீட்டிற்கு வராமல் கெஸ்ட் ஹவுஸில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு சுந்தர் சி. வீடு திரும்பிவிட்டார்.
இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
என் கணவர் வீடு திரும்பிவிட்டார். என் குழந்தைகளுக்கு அவர்களின் அப்பா வீட்டிற்கு வந்துவிட்டார். என் மாமியாருக்கு அவரின் மகன் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துவிட்டார். ஆனால் நான் அனைவரின் குடும்பத்தாரும் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன். நெகட்டிவிட்டியை தூரம் வைத்துவிட்டு நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என தெரிவித்துள்ளார்.
குஷ்புவின் ட்வீட்டை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் கூறியிருப்பதாவது,
இது நல்ல செய்தி குஷ்பு. பத்திரமாக இருக்கவும். சுந்தர் சி. வீடு திரும்பியதில் மகிழ்ச்சி மேடம். ஏதாவது ஒரு நல்ல செய்தியை கேட்க மாட்டோமா என்று இருந்தபோது நீங்கள் இந்த ட்வீட்டை போட்டிருக்கிறீர்கள். சில நாட்களுக்கு பிள்ளைகளிடம் சமூக விலகலை கடைபிடிக்கச் சொல்லுங்கள்.
அவரை வீட்டில் மேலும் 14 நாட்களுக்கு குவாரன்டைனில் இருக்கச் சொல்லுங்கள். உங்கள் அனைவரின் நலனுக்காகவும் தான் சொல்கிறோம். சுந்தர் சி.யின் அரண்மனை 3 படத்தை பார்க்க காத்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் சுந்தர் சி.: வீட்டில் குஷ்புவுக்கு துணையா யார் இருக்காங்கனு பாருங்க:
சுந்தர் சி.க்கு ஜலதோஷம் தான் ஏற்பட்டது. இருப்பினும் டாக்டர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அவர் மருத்துவமனையில் இருந்தபோது தங்களின் செல்ல நாய் குல்ஃபி சுந்தர் தனக்கு துணையாக இருந்ததாக குஷ்பு ட்வீட் செய்தார். எஜமானர் வீட்டில் இல்லை, நான் கவலையில் இருப்பதை உணர்ந்து குல்ஃபி என்னை விட்டு எங்குமே செல்லவேலை என்றார் குஷ்பு என்பது குறிப்பிடத்தக்கது.