ஒலிம்பிக்கிற்கு மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், விரைவான கொரோனா வைரஸ் எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜப்பான் டோக்கியோவிற்கும், மேலும் மூன்று மேற்கு மாகாணங்களுக்கும் இன்று அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தது.டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ ஆகிய மாகாணங்களில் ஏப்ரல் 25 முதல் மே 11 வரை அவசரகால நிலையை பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்தார்.
ஏப்ரல் பிற்பகுதியிலிருந்து மே முதல் வாரம் வரை ஜப்பானின் கோல்டன் வீக் விடுமுறை நாட்களில் மக்கள் பயணம் மேற்கொள்வதன் பரவுவதைத் தடுக்க குறுகிய மற்றும் தீவிரமான நடவடிக்கையாக இந்த நடவடிக்கை உள்ளது என ஜப்பான் பிரதமர் சுகா கூறினார். பொதுமக்கள் இதை புரிந்து கொண்டு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் இன்று தெரிவித்துள்ளார்.
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஜப்பானின் மூன்றாவது அவசரநிலை டோக்கியோ பகுதியில் முந்தைய அவசரநிலை முடிவடைந்த ஒரு மாதத்திற்குப் பிறகு வருவது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, டோக்கியோவில் 2020’இல் நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை 23’ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன் கொரோனா கட்டுக்குள் வருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.