அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் காரணமாக, பாகிஸ்தானின் முக்கிய மருத்துவமனைகளில் அதிக நெருக்கடியான சூழல் நிலவுகிறது. தற்போது கொரோனா வைரஸின் மூன்றாவது அலைகளின் கீழ் பாகிஸ்தான் தள்ளாடுகிறது.
கொரோனா நோயாளிகளின் அலைகளுக்கு மத்தியில், பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையான, இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம் (பிம்ஸ்) ஆக்ஸிஜன் பற்றாக்குறையுடன் போராடி வருவதால், இஸ்லாமாபாத்தின் நிலைமை குறிப்பாக ஆபத்தானது என்று தெரிகிறது.
இதற்கிடையே நேற்று பாகிஸ்தானில் 5,870 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் தனது அதிகாரப்பூர்வ வலை இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல்களின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் குறைந்தது 53,818 கொரோனா வைரஸ் சோதனைகள் நேற்று நடத்தப்பட்டன. அவற்றில் 5,870 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வென்டிலேட்டர்கள் அலாரங்களை ஒலிக்கத் தொடங்கியபோது, ஏப்ரல் 18 அன்று பிம்ஸில் மிக மோசமான சூழ்நிலை தெரிவிக்கப்பட்டது.ஒரு நோயாளிக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜனின் அழுத்தம் தேவையான அளவை விடக் குறையும் போது வென்டிலேட்டர் அலாரங்கள் தூண்டப்படுகின்றன. அன்று, ஆக்சிஜன் 70% வரை குறைந்தது.
கொரோனா வைரஸ் தீவிர சிகிச்சை வார்டில் அந்த நேரத்தில் வென்டிலேட்டர்களில் ஐந்து நோயாளிகள் இருந்ததால் இந்த சம்பவம் அந்த இடத்தில் பீதியை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 183 படுக்கைகளில் 147 நோயாளிகள் இருந்தனர். மருத்துவமனையின் அவசர வார்டில் தனியாக 30 நோயாளிகள் இருந்தனர்.
பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலோர் உயிர்காப்பதற்கான உயர் ஓட்ட ஒக்ஸிஜனை சார்ந்து இருப்பதால் நிலைமை தீவிரமாக உள்ளது. சாதாரண நோயாளிகளுடன் ஒப்பிடுகையில் அவர்களுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படும் ஒரு மருத்துவ நிலை இருக்கும் சூழலில், அவர்கள் கடுமையான சுவாசக் கஷ்டங்களால் பாதிக்கப்படுகின்றனர்.
பிம்ஸ் மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் மின்ஹாஜ்-உஸ்-சிராஜ், ஒக்ஸிஜன் அழுத்தம் குறைந்து வருவதே முக்கியமாக மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் கூர்மையான அதிகரிப்பால் தான் என்று கூறினார்.இதற்கிடையே இந்த மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு போதுமான வென்டிலேட்டர்களும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அண்மையில், பாகிஸ்தான் திட்டமிடல், மேம்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் அமைச்சர் அசாத் உமர் நிலைமை குறித்து கவலை தெரிவித்தார். நாட்டில் ஒக்ஸிஜன் விநியோக திறன் இப்போது கடும் அழுத்தத்தில் உள்ளது மற்றும் மருத்துவமனைகள் முழுமையாக நிரம்பி வருகின்றன எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.