தயாரிப்பாளராகவும், வில்லனாகவும் மிரட்டிய ஆர்.கே.சுரேஷ் பில்லா பாண்டி திரைப்படம் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்நிலையில் தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகி உள்ளார் ஆர்.கே.சுரேஷ். இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், தாயும் சேயும் நலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2011-ஆம் ஆண்டு வெளியான ‘தம்பிக்கோட்டை’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். இயக்குநர் பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தின் படத்தின் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்தார். அதன் பிறகு, மருது, ஸ்கெட்ச், நம்ம வீட்டு பிள்ளை, புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ஆர்.கே.சுரேஷ்.
தாரை தப்பட்டை திரைப்படத்தில் அமைதி ஆசாமியாக அறிமுகமாகி படுபயங்கரமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி அனைவரையும் மிரட்டியிருந்தார். அதே போல் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சமுத்திரக்கனியின் நண்பராக குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனிடையில் பில்லா பாண்டி திரைப்படம் மூலம் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால் அவருக்கு இந்த படம் சொல்லி கொள்ளும்படியான வெற்றியையோ, பெயரையோ கொடுக்கவில்லை.
இந்நிலையில் ஆர்.கே.சுரேஷுக்கும் சீரியல் நடிகை திவ்யா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், அதன்பிறகு திருமணம் நின்றுவிட்டதாக கூறிய திவ்யா, அவர் மிகவும் நல்ல மனிதர். ஆனால் எங்களுக்குள் நிறைய விஷயங்கள் வேறுபடுகிறது. இந்த கருத்துவேறுபாடுகள் பெரிதாகி திருமணம் முடிந்த பிறகு பெரும் பிரச்சனை வர வேண்டாம் என எங்களுக்குள் நாங்களே பேசி முடிவு செய்தோம். இதனால் தான் தற்போது நாங்கள் திருமணம் வேண்டாம் என பிரிந்துவிட்டோம் என அதற்கான காரணத்தையும் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கும், சினிமா பைனான்சியரான மது என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், எங்கள் வாழ்க்கையில் கிடைத்துள்ள புதிய ஆசீர்வாதத்தைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் குடும்பம் பெண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர் என பதிவிட்டுள்ளார் ஆர்.கே.சுரேஷ்.