நீச்சல் குளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய பொமேரியன் நாய் ஒன்றை, மற்றொரு நாய் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ நெட்டிசன்களின் மனதை இளக்கி உள்ளது. ஜோகன்ஸ்பெர்க் நகரில் வசித்து வரும் பைரான் தனராயன் மற்றும் மெலிசா தம்பதியினர் சூக்கி என்ற பொமேரியன் நாயையும், ஜெசி என்ற கருப்பு நிற நாய் ஒன்றையும் வளர்த்து வந்தனர். தம்பதியினர் வீட்டில் இல்லாத போது, தவறுதலாக நடந்த ஒரு சம்பவம்தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.
சிசிடிவியில் பதிவாகி இருக்கும் காட்சியில், பொமேரியன் நாய் தவறுதலாக நீச்சல் குளத்திற்குள் விழுந்து போராடிக் கொண்டிருக்கிறது. மேலே ஏறி வர அது எவ்வளவு முயற்சித்தும் அதனால் முடியவில்லை. அப்போது அங்கு ஓடி வந்த ஜெசி, பொமேரியனை காப்பாற்ற முயற்சிக்கிறது.
நீச்சல் குளத்தை சுற்றி, சுற்றி ஓடி வரும் ஜெசி, பல்வேறு வழிகளில் தனது முயற்சியை தொடர்கிறது. சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக இது தொடர, ஒருவழியாக பொமேரியனை தண்ணீருக்குள் இருந்து, கருப்பு நாய் காப்பாற்றிவிடுகிறது. பின் இணைந்து விளையாட்டில் ஈடுபடுகின்றன. நெட்டிசன்களிடம் பெரும் ஆவலை இந்த வீடியோ ஏற்படுத்தி இருக்கிறது.
வீட்டிற்கு திரும்பிய தம்பதியினர் நாய் நனைந்திருப்பதை கண்டு சந்தேகத்துடன், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, சூக்கியை ஜெசி தண்ணீருக்குள் இருந்து காப்பாற்றியதை கண்டிருக்கின்றனர். இந்த வீடியோவை அவர்கள் பேஸ்புக்கில் பதிவிட, லைக்ஸ்களையும், கமெண்ட்ஸ்களையும் குவித்து வருகிறது. அடுத்த முறை வெளியே செல்லும் போது, நீச்சல் குளத்தை மூடிவிட்டு செல்லும்படி, பலரும் அட்வைஸ் செய்து வருகின்றனர். இதனை அந்த தம்பதியினரும் ஏற்று கொண்டுள்ளனர். அன்பு.. அது தானே எல்லாம்..!!