நியூசிலாந்து நாட்டில் இருக்கும் ஆசிய யானைகளா அஞ்சலி மற்றும் பர்மா என்ற இரு பெண் யானைகள் விரைவில் அவுஸ்திரேலியா அழைத்து செல்லப்பட உள்ளன.
நியூசிலாந்தின் மிகப் பெரிய மிருகக்காட்சிசாலையான ஆக்லாந்து மிருகக்காட்சிசாலையில் உள்ள இரண்டு யானைகளை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆசிய யானைகளான அஞ்சலி (14) மற்றும் பர்மா (38) ஆகிய இரண்டு பெண் யானைகள் மட்டுமே நியூசிலாந்தில் இப்போது இருக்கும் நிலையில், அவையும் இந்த ஆண்டின் இறுதிக்குள் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட உள்ளன. அஞ்சலி துபோவில் உள்ள தரோங்கா வெஸ்டர்ன் ப்ளைன்ஸ் மிருகக்காட்சிசாலையில் உள்ள யானைக் கூட்டத்துடனும், பர்மா அவுஸ்திரேலியா மிருகக்காட்சிசாலையில் உள்ள யானைகள் கூட்டத்துடனும் சேர்க்கப்பட உள்ளன.
இதுகுறித்து ஆக்லாந்து உயிரியல் பூங்கா இயக்குனர் கெவின் புலே கூறுகையில், ‛நாங்கள் எப்போதும் விலங்குகளின் நலனுக்கு முதலிடம் கொடுப்போம். அவைகளை அங்கு அனுப்புவதால், அஞ்சலியால் இனப்பெருக்கம் செய்ய முடியும். ஆஸ்திரேலிய சகாக்களுடன் இணைந்து, இந்த இரு யானைகளின் எதிர்காலத்தை பூர்த்தி செய்ய தேவையான திட்டத்தை வகுக்க உள்ளோம்.
அஞ்சலியை மூன்று ஆண், இரு பெண் மற்றும் ஒரு குட்டி யானை இருக்கும் கூட்டத்தில் இணைக்க உள்ளோம். இதனால் அதற்கு இனப்பெருக்கம் செய்ய வழி பிறக்கும், வயது முதிர்ந்த பர்மாவால் இனப்பெருக்கம் செய்ய முடியாது என்பதால், நான்கு பெண் யானைகள் உள்ள கூட்டத்தில் இணைக்க உள்ளோம். அவுஸ்திரேலியாவில் அவை பழக்கப்பட, ஆக்லாந்து உயிரியல் பூங்காக்கள் மற்றும் ஊழியர்கள் உடன் பயணம் செய்வார்கள். யானை பராமரிப்பாளர்கள், இரு யானைகளுடனும் பல வருட அனுபவமும், நெருங்கிய உறவும் கொண்டவர்கள். நியூசிலாந்தில் இனி யானைகள் இருக்காது என்பது எங்களுக்கு வருத்தம் தரும் செய்தி தான். ஆனால் அவற்றின் தேவை பூர்த்தி அடையும் என்பதால், இது எங்களுக்கு நிம்மதியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது’ இவ்வாறு அவர் கூறினார்.