முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவியை மீண்டும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றுமா என்ற கேள்வியெழுந்துள்ளது. பரபரப்புக்கு மத்தியில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று (22) இடம்பெறவுள்ளது
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பினை பிரதிநித்துவப்படுத்தும் கனகையா தவராசா, கடந்த மூன்று வருடங்களாக கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக பதவிவகித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள், தமக்கிடையில் தவிசாளர் பதவியை பகிர்ந்து கொள்வதாக ஆரம்பத்தில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொண்டனர். எனினும், தற்போதைய நிலையில் தவிசாளர் பதவி மாற்றம் என்பது, இருப்பதையும் பறிகொடுக்கும் வேலையென்ற புதிய நிலைமை உருவாகியதையடுத்து, அந்த முயற்சியை கூட்டமைப்பு கைவிட்டிருந்தது.
எனினும், ரெலோவின் எம்.பி, வினோ நோகராதலிங்கத்தின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஒருவரை தவிசாளராக்குவதாக அவர் வாக்களித்து விட்டதால், தவிசாளர் மாற்றம் நடக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றார்.
இதனால், கடந்த 18.03.2013 அன்று, அவர் கட்சியின் அறிவுறுத்தலை ஏற்று, கரைத்துறைப்பற்று தவிசாளர் தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
அந்தவகையில் குறித்த பிரதேசசபையின் புதிய தவிசாளருக்கான தெரிவு இன்று (22) இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 09.04.2021 அன்று வெளியிடப்பட்ட, 2222/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியிலும் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபையின் புதிய தவிசாளர் தேர்வு இடம்பெறுமென அறிவித்தல் வெளியாகியுள்ளது.
புதிய தவிசாளர் தேர்வு தொடர்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்ந்தோர் ஒன்றுகூடி, கலந்துரையாடல் ஒன்றினை நேற்று முன்தினம் நடாத்தியுள்ளனர். தமிழ்தேசியக்கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுதவிர கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவியை கைப்பற்ற பொதுஜன பெரமுண கட்சியும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது
தமிழ் தேசிய கூட்டமைப்பு -09,ஈழமக்கள் ஜனநாயக கட்சி -02, தமிழர் விடுதலை கூட்டணி-02, சுயேட்சை குழு-03, பொதுஜன பெரமுன -02, சிறிலங்கா சுதந்திர கட்சி -01, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -01, ஐக்கிய தேசிய கட்சி -03, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் -01 என 24 உறுப்பினர்கள் உள்ள சபையில் நாளை மூவர் தவிசாளர் பதவிக்கு போட்டியிடலாம் என எதிர்பாக்கப்படுகிறது
ரெலோவின் தேசிய அமைப்பாளர் சுரேனின் தேர்தல் பணி செய்தவருக்கு தவிசாளர் பதவி வழங்க வேண்டுமென அடம்பிடித்ததால், கூட்டமைப்பு நல்லூர் பிரதேசசபையை இழந்தது. இதேபோல, ரெலோவின் இன்னொரு எம்.பியான வினோ நோகராதலிங்கத்தின் தேர்தல் பணி செய்தவருக்கு தவிசாளர் பதவி கொடுக்க வேண்டுமென்ற செஞ்சோற்று கடனால் மீண்டும் இன்று வாக்கெடுப்பு நடக்கிறது.




