நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டா இன்று (20) 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திடுக்கிடும் தகவலொன்றை வெளியிட்டார். இதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சூடான நிலைமையேற்பட்டது.
பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து ஆக்ரோசமான எதிர்க்கருத்துக்கள் கிளம்பின.
இன்று காலை நாடாளுமன்றத்தில் பேசிய ஹரின் பெர்னாண்டோ, ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட முதல் சந்தேக நபர்களில் ஒருவருக்கும் புலனாய்வு அதிகாரியொருவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சாட்சிய விசாரணையைத் தொடங்கியபோது இந்த விஷயம் தெரியவந்ததாக தெரிவித்தார்.
தாக்குதல்களின் சூத்திரதாரி நாஃபர் மௌலவி என்று அரசாங்கம் கூறியிருந்தாலும், அவர் ஒரு முறையாவது ஆணைக்குழுவின் முன் ஆஜர்படுத்தப்படவில்லை. நாஃபர் மௌலவி ஆணைக்குழுவில் எந்த அறிக்கைகளையும் பதிவு செய்யவில்லை.
தேசிய பாதுகாப்புக்காக ஏராளமான பணத்தை செலவழித்த நாட்டில். தாக்குதலின் சூத்திரதாரியை ஆணைக்குழுவின் முன் கொண்டுவரவும், அறிக்கை பதிவு செய்யவும் தவறியதால் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்தார்.
குற்றவியல் புலனாய்வுதுறையின் முன்னாள் பணிப்பாளர் சனி அபேசேகரதான், தாக்குதல் சூத்திரதாரியை முதலில் அடையாளம் கண்டார். ஐ.பி முகவரி மூலம் சூத்திரதாரியை முதலில் அடையாளம் கண்டார். அவருடன் ஒரு புலனாய்வு அதிகாரி நெருக்கமாக செயற்பட்டதை அவதானித்தார்.
இந்த உண்மை இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. அது ஆணைக்குழுவிற்குத் தெரிந்த ஒரு தகவல் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், எந்த அறிக்கையிலும் வெளியிடப்படவில்லை.
உளவுத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டிருந்தாலும் பின்னர் அவர் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு விட்டார் என்றார்.
அவரது உரைக்கு பொதுஜன பெரமுன எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாடாளுமன்ற சிறப்புரிமையின் பின்னால் ஒளிந்திருந்து கருத்து தெரிவிக்காமல், சிஐடியிடம் இந்த விடயத்தை முறைப்பாடு செய்யுமாறு ஆளுந்தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.