மட்டக்களப்பு, நாவலடியில் அன்னை பூபதியின் கல்லறை அமைந்துள்ள பகுதியில் பொலிசாரும், புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு, அஞ்சலி நிகழ்வுகள் தடுக்கப்பட்டுள்ளன. அன்னை பூபதியின் மகளுக்கும் அஞ்சலிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் திடீரென அங்கு அஞ்சலி செலுத்த வரலாமென பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, இரவிரவாக அங்கு பொலிசார் கடமையிலுள்ளனர்.
இந்திய இராணுவத்தினர் இலங்கையில் இருந்து வெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 33ஆவது நினைவு தினம் இன்றாகும்.
1988.03.19 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த அன்னை, நீராகாரம் மட்டும் பருகினார். 1988.04.19 அன்று உயிர் துறந்தார்.
அன்னையின் நினைவு நிகழ்வை தடுக்க பொலிசார் நீதிமன்ற உத்தரவை பெற்றிருந்தனர்.
எனினும், பொலிசார் தயாராவதற்குள் கூட்டமைப்பினர் அதிரடியாக செயற்பட்டு அஞ்சலி நிகழ்வை நடத்தி முடித்து விட்டனர். காலை 6 மணிக்கே, கல்லறைக்கு சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்தின்,ஞா.ஶ்ரீநேசன், மட்டக’்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், ஏறாவூர் பற்று தவிசாளர் எஸ்;.சர்வாணந்தன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் என்.நடராசா ஆகியோரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியுடன் தொடர்ந்து 2 நிமிட மௌண அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவர்கள் அஞ்சலி செலுத்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து அவ்விடத்தில் இருந்து செல்லும் போது நீதிமன்ற உத்தரவுடன் காத்தான்குடி பொலிசார். வந்திருந்தனர்.
எனினும் பொலிசார் வருவதற்கு முன்னர் சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி முடிந்து விட்டது.
அதன் பின்னர், யாரையும் அஞ்சலி செலுத்த விடாமல் பொலிசாரும், புலனாய்வாளர்களும் அங்கு குவிக்கப்பட்டனர்.
காலை 8.30 மணியளவில் அன்னை பூபதியின் மகள்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் வந்தனர். எனினும், அவர்களின் பெயர்கள் குறிப்பிட்டு பொலிசார் நீதிமன்ற தடையுத்தரவை பெற்றிருந்தனர். நீதிமன்ற தடையுத்தரவு உள்ளவர்களை அஞ்சலிக்க அனுமதிக்க மாட்டோம் என பொலிசார் தடுத்தனர். இதனால் பெரும் இழுபறி அங்கு ஏற்பட்டது.
இதற்குள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் மட்டக்களப்பில் தங்கியிருப்பதாகவும், அவர் திடீரென அஞ்சலி செலுத்த வருவார் என்றும் பாதுகாப்பு வட்டாரங்களிற்கு தகவல் கிடைத்ததாக கூறப்பட்டது.
இதை தொடர்ந்து, இரவிரவாக பொலிசார் அங்கு காத்திருக்கிறார்கள்.