31.3 C
Jaffna
May 8, 2021

முக்கியச் செய்திகள்

சீமான் முதல்வரானால் இலங்கை மீது படையெடுத்து வரப் போகிறாரா?: எம்.கே.சிவாஜிலிங்கம்!

அரசியல்வாதிகள் ஏட்டிக்கு போட்டியாக தமது கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மாவை சேனாதராசா- க.வி.விக்னேஸ்வரன், சீமான்- அனந்தி சசிதரன் சர்ச்சைகளினால் அண்மைய அரசியல் களம் சூடு பிடித்தள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்ற நிலைப்பாட்டை இன்னும் அரசு எடுக்கவில்லை அந்த அடிப்படையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பழைய முறையில் நடத்தப் படுமா அல்லது தொகுதிவாரி அல்லது விகிதாசார முறையில் நடத்தப் படுமா என்ற கேள்வி கூட காணப்படுகின்றது.

அந்த நிலைமையில் வடக்கு மாகாணத்தில் மாகாண சபைத் தேர்தல் இடம் பெற்றால் அதில் யாரை முதலமைச்சராக நிறுத்துவது என்பது தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியத்தின் ஆட்சி இடம் பெற வேண்டும் என மக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவி வருகின்றது.

வடக்குக் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தின் ஆட்சியினை நிலைநிறுத்துவதற்குரிய நடவடிக்கையை முன்னெடுப்பதை விடுத்து எதிர் மாறான கருத்துக்களை அரசியல்வாதிகள் முன்வைப்பதை நிறுத்த வேண்டும். அண்மையில் கூட முன்னாள் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளருக்கு தகுதியற்றவர் என்ற கருத்தினை குறிப்பிட்டு இருந்தார். அந்த கருத்தை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.

அதாவது அந்த அந்த சூழ்நிலையில் சம்பந்தன் ஐயாவினால் மாவை சேனாதிராஜா தகுதியற்றவர் என்று அடிப்படையிலேயே தான் தெரிவு செய்யப்பட்டதாக தெரிவித்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கின்றது குறிப்பாக அந்த சூழ்நிலையின் போது சம்பந்தன் ஐயாவின் முடிவுக்கு கட்டுப்பட்டு நாம் அனைவரும் விக்னேஸ்வரன் அவர்களை ஆதரித்து வெற்றியடைய செய்தோம்.

ஆனால் அதே கருத்தினை இன்று நாங்கள் கொண்டிருக்க முடியாது அதனால் மாவை சேனாதிராஜா தகுதியற்றவர் என்று கருத முடியாது எனவே எதிர்காலத்திலும் நாம் இவ்வாறான ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்த்து சிறந்த ஒரு ஆட்சியை அமைப்பதற்கு நாம் செயற்பட வேண்டும் எனவே எதிர்வரும் காலத்தில் ஒருவரை ஒருவர் விமர்சித்தல் செயற்பாடுகளை தமிழ் அரசியல்வாதிகள் நிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

எமக்கு இந்தியாவிலுள்ள 130 மக்களினதும், தமிழகத்திலுள்ள 8 கோடி மக்களினதும் ஆதரவு எமக்கு தேவை. நாம் தனிப்பட்ட யாரொருவரையும் நம்ப முடியாது. தான் மட்டுமே ஈழத்தமிழர்களின் ஆதரவாளன், எனக்கு மட்டுமே உதவி செய்யுங்கள், என் மூலமாக மட்டுமே உதவி செய்யுங்கள் என யாராவது கேட்க முடியாது. சீமானிற்கு மட்டும் தேர்தல் செலவிற்காக பெருந்தொகை பணத்தை புலம்பெயர் தமிழர்கள் அனுப்பியுள்ளனர்.

நாம் நெல்லிக்காய் மூட்டையை போல சிதறி செயற்படாமல் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும். இப்படியான பணங்களை, தமிழர்களிற்கு நீதி கிடைக்கும் விதமாக பயன்படுத்த வேண்டும். யுத்தத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு நியாயம் கிடைக்க, சர்வதேச பொறிமுறைகளை உருவாக்குவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். சீமான் தமிழக முதல்வரானதும் இலங்கை மீது படையெடுத்து வரப் போகிறாரா? அவரும் இந்திய சட்டத்திற்கு உட்பட்டே செயற்பட முடியும்.

இந்தியாவில் பலர் எமக்கு உதவி செய்தார்கள். வடநாட்டை சேர்ந்த இந்திராகாந்தி எமக்கு உதவி செய்தார். ஜோர்ஜ் பெர்னாண்டஸ் உதவி செய்தார். நாம் இந்திரா காந்தி அம்மையாருக்கு இங்கு சிலை வைக்க வேண்டும். இப்போது கூட தாமதமாகி விடவில்லை.

அனந்தியை தமிழகத்தில் பலர் விமர்சிக்கிறார்கள். அது பிழையான நடவடிக்கை. ராஜிவ் காந்தியை நாம்தான் கொன்றோம் என அங்கு போய் கூறுவதையும் நிறுத்த வேண்டும். நாம்தான் கொன்றோம் என தலைவர் பிரபாகரன் கூட சொல்லவில்லை. அது ஒரு துன்பியல் சம்பவம் என்றுதான் கூறுகிறார். அங்கு 30 வருடங்களாக ராஜீவ் கொலை வழக்கில் தமிழர்கள் சிறையில் உள்ளனர். அவர்களிற்கு நிகழும் அநீதியை நியாயப்படுத்தும் விதமாக பேசக்கூடாது.

Related posts

மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Pagetamil

ரெலோவிற்குள் மீண்டும் பிளவு?: தமிழ் அரசு கட்சியுடன் இணையும் ஒரு தரப்பு!

Pagetamil

வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

Pagetamil

Leave a Comment