கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை விசாரணை செய்வதற்காக உயர் நீதிமன்றத்தினால் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்புக்களால் இன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
புவனெக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, முர்த்து பெர்ணான்டே மற்றும் ஜனக் த சில்வா ஆகியவர்கள் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நீதிபதிகள் குழு முன்னிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
தகவல் தொழில்நுட்ப வல்லுனர் சங்கத்தின் தலைவர் கபில ரேணுகவினால் முன்னதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரண்டு மனுக்கள் ஐக்கிய தேசியக் கட்சியால் தாக்கல் செய்யப்பட்டது. வஜிர அபேவர்தனா மற்றும் பாலித ரங்கே பண்டாரா ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஜேவிபி மற்றும் தொழிற்சங்கம் ஒன்று சார்பில், ஜேவிபியின் அரசியல்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க மனுத்தாக்கல் செய்தார்.
மாற்று கொள்கைகளிற்கான மத்திய நிலையம் சார்பில் பாக்கியசோதி சரவணமுத்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் என்பனவும் மனுத்தாக்கல் செய்தன.
பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
துறைமுக நகரம் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், முறையாக செயல்படுத்தப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரிதும் பயனளிக்கும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில்சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சட்ட வரைபின் மூலம், ஒரு ஆணைக்குழுவை நியமிப்பது தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரைவு இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் மீறும் என்று மனுக்கள் குற்றம் சாட்டுகின்றன.
மசோதாவின் பிரிவு 6 (1) துறைமுக நகரத்திற்குள் முதலீடுகள் மற்றும் வணிக நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ஆணைக்குழுவிற்கு மட்டும் ஒப்படைப்பதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
துறைமுக நகர ஊழியர்களுக்கு விசா வழங்குவது உட்பட வரைபின் சில விதிகள் மூலம் பொருளாதார ஆணைக்குழுவின் அதிகாரத்தையும் மனுக்கள் குறிப்பிடுகின்றன. இது தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாகும்.
சட்டவரைபு மார்ச் 23 அன்று ஒரு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாகவும், அது ஏப்ரல் 8 அன்று பாராளுமன்றத்தில் வழங்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் விதிகளின்படி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் வரைபை மாகாண சபைகளுக்கு ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க ஜனாதிபதி தவறிவிட்டார் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட சட்ட வரைபை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அல்லது பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு விளக்கம் வெளியிடுமாறு மனுதாரர் கோரியுள்ளனர்.