நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இந்திய பேட்மின்டன் வீரர் ஜுவாலா கட்டா இருவரும் தங்களது திருமணத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
கடந்த சில வருடங்களாவே இருவரும் தொடர்பில் இருந்த நிலையில், கடந்த வருடம் ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளன்று மோதிரம் அணிவித்து நிச்சயம் முடிந்து விட்டது என அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருவரும் பகிர்ந்தனர். திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் எனப் பலரும் இருவருக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த மாதம் பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடித்த `காடன்’ படம் வெளியானது.
படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டாவுடன் விரைவில் திருமணம் எனவும் பேட்டிகளில் தெரிவித்திருந்தார். தற்போது, இந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி திருமணம் நடக்க இருப்பதை இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
“இருவரது குடும்பங்களின் ஆசீர்வாதத்தோடு எங்களது திருமணம் நடக்க இருக்கிறது. இந்தச் செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.
இத்தனை நாள்கள் நீங்கள் காட்டிய அன்புக்கு நன்றி. இனி எங்கள் வாழ்க்கையில் இந்தப் புதிய பயணத்திலும் அதே மாறாத அன்பும், அக்கறையும், வாழ்த்தும் நீங்கள் தர வேண்டும்” என தங்களது திருமண செய்தியை பதிவிட்டுள்ளனர்.
பல பிரபலங்களும், ரசிகர்களும் விஷ்ணு விஷாலுக்கும் ஜுவாலாவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
விஷ்ணு விஷாலுக்கு ரஜினி என்பவருடன் 2010-ல் திருமணம் நடந்து 2018-ல் விவாகரத்து நடந்தது. இவர்களுக்கு ஆர்யன் என்ற நான்கு வயது மகன் இருக்கிறார். விவாகரத்துக்குப் பின் மன அழுத்தம், குடி, தூக்கமின்மை பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த விஷ்ணு விஷால், அதிலிருந்து மீண்டு வந்து தற்போது தனது உடல்நலனிலும் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஜுவாலா கட்டாவுக்கு பேட்மின்ட்டன் வீரர் சேத்தன் ஆனந்த் என்பவருடன் திருமணம் நடந்து 2010-ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவை சேர்ந்தவரான ஜுவாலா கட்டா தற்போது தனது பேட்மின்ட்டன் அகாடெமியில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வர, விஷ்ணு விஷால் `எஃப்ஐஆர்’, `மோகன்தாஸ்’, `இன்று நேற்று நாளை2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.