தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் நாடாளுமன்ற அஞ்சல் முத்திரைகளை ஐ.தே.க மோசடியாக பயன்படுத்தியதாக சிங்கள் ஊடகமொன்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவைக்காக அஞ்சல் முத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த அஞ்சல் முத்திரைக்கு மேலாக, நாடாளுமன்ற உறுப்பினர் தனது இலட்சினையை பொறித்து, உத்தியோகபூர்வ தேவைகளிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வசதியை பயன்படுத்தியே பல எம்.பிக்கள் தேர்தல் காலங்களில் பொதுமக்களிற்கு கடிதங்களை அனுப்புவார்கள்.
தற்போது ஐ.தே.கவில் எந்த எம்.பியும் கிடையாது. வீணாக பணம் செலவழித்து அஞ்சலை அனுப்பாமல், யாராவது எம்.பியின் பெயரில் கடிதங்களை அனுப்புவோம் என யோசித்தார்களோ, என்னவோ, செல்வம் அடைக்கலநாதன் எம்.பியின் இலட்சினை பொறிக்கப்பட்ட அரச பணி கடித உறைகளை ஐ.தே.கவினர் பயன்படுத்தி கடிதங்களை அனுப்பியதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுபற்றி தான் செய்திகளை படித்தே அறிந்ததாகவும், விசாரணையை கோரியுள்ளதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
செல்வம் அடைக்கலநாதனின் அலுவலக பணியாளர்கள் யாரேனும் இலட்சினையை வழங்கினார்களா அல்லது இலட்சினை போலியாக தயாரிக்கப்பட்டதா அல்லது இதில் வேறோதும் விவகாரங்கள் அடங்கியுள்ளதா என்பது இதுவரை தெரியவரவில்லை.