எதிர்மறை எண்ணங்களைக் களைந்து, வீரத்தை யாசித்து, இறைவனது துதிபாடி, மகிழ்ந்திருந்த தினம் தான், ‘கல்சா பந்த்’ எனும் வைசாகி தினம் என்கிறது சீக்கிய வரலாறு.
பஞ்சாபியர்களின் சூரியப் புத்தாண்டுத் துவக்கத்தையும், இளவேனில் அறுவடை நாளின் ஆரம்பத்தையும் குறிக்கும் வைசாகி தினம் (Baisakhi) இன்று பஞ்சாப் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
கிட்டத்தட்ட நமக்கு பொங்கல் போன்றது தான் பஞ்சாபியரின் வைசாகி என்றாலும் இதுதான் அவர்களுக்கு புத்தாண்டு தினமும் கூட. இந்த நாளில் பஞ்சாப் மாநிலத்தின் உழவர்கள் புனித நதிகளில் நீராடி, தாங்கள் அறுவடை செய்த பொன் நிற கோதுமையை இறைவனுக்கு சமர்ப்பித்து, இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி கூறி, உற்றார் உறவினருடன் ஒன்றுகூடி மகிழ்ந்திருப்பார்கள்.
பஞ்சாபியர் மட்டுமின்றி இதே தினத்தை கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம், ஹிமாச்சலப் பிரதேசம், திரிபுரா, உத்தர்காண்ட் மக்களும், இலங்கை மற்றும் நேபாள நாட்டு மக்களும் கூட தமது புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள் என்றாலும், சீக்கியர்களின் வைசாகிக்கு மட்டும் தியாகத்துடன் கூடிய இன்னுமொரு சிறப்பும் உள்ளது.
சீக்கியம் என்ற சொல்லுக்கு “சீடர் அல்லது கற்றுக் கொள்பவர்” என்றுதான் பொருள். வீரம் என்றால் முதலில் நிற்கும் சீக்கியர்களுக்கு, தியாகத்தின் திறத்தை உணர வைக்க சீக்கியர்களின் பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங் உருவாக்கிய ‘கல்சா பந்த்’ என்ற நிகழ்வின் நினைவு தினமும் தான் இந்த வைசாகி என்று கூறும் சீக்கியர்கள், அதன் வரலாற்றுப் பின்னணியையும் எடுத்துரைக்கிறார்கள்.
அவர்களது ஒன்பதாவது குருவான, குரு தேஜ் பகதூர், தனது மக்களுக்காக நடத்திய போராட்டத்தில், முகலாய அரசர் ஔரங்கசீப்பினால் பொதுவெளியில் தலை கொய்யப்பட்டு இறக்க, அவரைத் தொடர்ந்து பொறுப்பேற்ற குரு கோவிந்த் சிங், 1699-ம் ஆண்டு, தனது தந்தையின் வீரத்தையும், தியாகத்தையும் தனது மக்களுக்கு உணர்த்த ஒரு ஏற்பாடு செய்கிறார். அனந்தபூரில், ஒரு பெரிய கூடாரத்தில் மக்களை ஒன்றுதிரட்டி, கூட்டத்தில் யாரேனும் ஐந்து பேரை ” இந்த மண்ணின் மக்களுக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயாரா..?” என்று கேட்க, முதலில் வந்தது “தயா ராம்” என்ற முப்பது வயது இளைஞர்.
அவரை அங்கிருந்த தனியான கூடாரத்திற்கு அழைத்துச்சென்ற குரு கோவிந்த் சிங், சற்று நேரத்தில் இரத்தம் சிந்திய வாளுடன் வெளியே வந்து, அடுத்த நபர் யாரெனக் கேட்க, அடுத்து தயக்கமின்றி தங்களை அர்ப்பணித்துக் கொள்ள முன்வந்த மேலும் நான்கு பேர்களைக் கொன்றவர், பிறகு இறுதியாக வெளிவந்த போது, அந்த ஐந்துபேரையும் உயிருடன் அழைத்து வந்தாராம். ஆரவாரமிட்ட மக்கள், தியாகம் செய்த அவர்களை “பஞ்ச் பியாரா”, அதாவது “பிரியமுள்ள ஐவர்” என அழைத்து, அந்த ஐவரையும் வணங்கித் தொழுதனர்.
அப்போது குரு அவர்களை வெட்டிய அந்த அதிசய வாளை, புனித நதிநீர் நிரம்பிய ஒரு கலசத்தில் வைத்து, “அம்ரித்” என்ற சாகாவரம் தரும் அந்த அமிர்த கலச நீரை, முதலில் அந்த ஐவருக்கும் அளித்து, பின்பு மற்ற அனைவருக்கும் பகிர்ந்தளித்தாராம். கூடவே வெட்டப்படாத கேசம், மர சீப்பு, இரும்பு வளையம், வாள், உள்ளாடை என ஐந்து சிறப்பம்சங்களையும் சீக்கியர்களிடம் கொண்டு சேர்க்கிறது கல்சா பந்த்.
இப்படி எதிர்மறை எண்ணங்களைக் களைந்து, வீரத்தை யாசித்து, இறைவனது துதிபாடி, மகிழ்ந்திருந்த தினம் தான், “கல்சா பந்த்” எனும் வைசாகி தினம் என்கிறது சீக்கிய வரலாறு. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வைசாகி நாளன்று குருத்வாராக்களில் சங்கீர்த்தன் இசைத்து, புனித புத்தகத்தைப் படித்து, “கந்த சாகிப்” என்ற வாளால் வீரமும், ஞானமும் பெற்று, அம்ரித் அருந்தி, சுவையான கடா பிரசாதத்தை உட்கொண்டு வழிபடும் நாளாக இருந்து வருகிறது இந்த வைசாகி.
சீக்கியத்தின் நிறுவனர் குரு நானக்கின் பெயரால் நானக்சாகி என அழைக்கப்படும் இவர்களது நாட்காட்டி, குரு நானக் பிறந்த ஆண்டான கிபி 1469-ல் இருந்து ஆரம்பிக்கிறது என்றாலும், 365 நாட்கள் 5 மணி 48 நிமிடம் 45 நொடிகள் நிறைந்த வருடத்தில், 31 நாட்கள் 30 நாட்கள் கொண்ட மாதங்கள், நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நாள் அதிகம் என மற்ற எல்லாமே கிரிகோரியன் காலண்டர் போலவே தான், இந்த நானக்சாகி நாட்காட்டி.
இப்போதும் ஏப்ரல் பதிமூன்று, வைசாகி நாளன்று, புனித நீராடல், புத்தாடை, பாரம்பரிய பாங்ரா, கிட்டா, பாடல்கள், அறுவடை, இனிப்புகள், மகிழ்ச்சி, ஞான உபதேசம், ஆசீர்வாதம், விருந்து, செழிப்பு என பஞ்சாப் மாநில மக்கள் அனைவருக்கும் வண்ணமிகு நாளாக விளங்குகிறது வைசாகி.
அனைத்திற்கும் மேலாக, வாள் பயிற்சி, குத்துச் சண்டை, மல்யுத்தம் போன்ற வீர விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் நாளாகவும் இந்நாள் விளங்குகிறது. வீரம் மட்டுமல்ல, நாங்கள் ஈரமும் மிக்கவர்கள் என்று கூறும் சீக்கியர்களின், “கல்சா எய்ட்” எனும் அமைப்பு, கொவிட் உட்பட உலகின் பேரிடர் காலங்கள் அனைத்திலும் பெருமளவு உதவி புரிந்து, அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரையும் பெற்றுள்ளது.
ஆக, இந்த பொன் அறுவடை நாளன்று சார்ந்தோர் அனைவருக்கும் மகிழ்ச்சியும், அமைதியும், வீரமும், வெற்றியும் நிறைந்திருக்கட்டும் என்று அவர்களுடன் சேர்ந்து நாமும் பிரார்த்திப்போம்!
வைசாகி தீ வாதையான்..!!!