28.9 C
Jaffna
June 26, 2022
லைவ் ஸ்டைல்

நீ என்பது நிறமல்ல!

வண்ணங்கள் நம் வாழ்க்கையோடும் வாழ்வியலோடும் பின்னிக்கிடக்கின்றன. கண்களின் அலகு வண்ணங்களே; அவை வண்ணங்களை அடையாளம் காணும் வகையில் படைக்கப்பட்டிருக்கின்றன. வண்ணங்களைக் கொண்டதாக இருப்பதால்தான் இயற்கையின்பால் ஈர்ப்புடையவர்களாகவும், நேசிப்பவர்களாகவும் இருக்கிறோம். இந்த நிற ஈர்ப்பினால்தான் ஆதிகாலத்துத் தொல்குடிகள் பாறைகளிலும் குகைகளிலும் வரைந்த ஓவியங்களில் வண்ணங்களை அதிகம் காணமுடிகிறது.

தொல்காப்பியர் வண்ணத்திற்கு ‘நிறன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். தொல் காப்பியத்தில் கறுப்பும் சிவப்பும் கோபத்தைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. திருவள்ளுவர் ‘கறுப்பு’ என்ற சொல்லையும் அவ்வையார் ‘சிவப்பு’ என்னும் சொல்லையும் ‘வெகுளி – சினம் என்னும் பொருளிலேயே குறிப்பிடுகிறார்கள். அழகு என்பது நிறம் சார்ந்ததாக சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. அழகு என்பது பெண், ஆண் உடல் சார்ந்த வர்ணனையாக மட்டுமே இருந்திருக்கிறது. அந்த வர்ணனையும் உடலின் வடிவம், அளவு, உடலுறுப்புகளின் பயன்பாடு, வளமை சார்ந்தே சொல்லப்பட்டிருக்கிறது. தலைவனைப் பிரிந்த தலைவியின் உடலில் பொன் நிறத்தில் பசலை பூக்கும் என்றும், மந்தியை ‘செம்மந்தி’ என்றும் குறிப்பிடுகின்ற இடத்திலும் நிறம் பற்றிப் பேசப்பட்டிருக்கிறது. சருமத்தின் நிறம் வைத்து உயர்வு தாழ்வு, அழகு அல்லது அழகில்லை போன்றவை அக்காலத்தில் பேசப்படவில்லை.

பக்தி இலக்கிய காலத்தில் “நிறங்கள் ஐந்துடையான்” என மாணிக்கவாசகர் எம்பெருமானைச் சுட்டுகிறார். தேவாரம், சிவபெருமானைப் பச்சை நிறம் உடையவனாகக் காட்டுகிறது. ஆண்டாளும் திருமாலை “கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேன்” என்கிறார்.

கறுப்பு நிறத்தால் ஆண் மட்டும் அல்ல; பெண்ணும் குற்ற உணர்ச்சியும் தாழ்வுமனப்பான்மையும் அடைகிறாள். ஆணுக்குக் கீழாகக் கருதப்படும் பெண் தன்னை மேல்நிலையாக்கம் செய்துகொள்ள விரும்புகிறாள். ஆணுக்குத் தரப்படும் மதிப்பும் செல்வாக்கும் தனக்கும் கிட்ட வேண்டுமென்றால் தான் சிவப்பாக மாற வேண்டும்; அதுதான் அழகு என்று உளவியல் ரீதியாக நம்புகிறாள். தானறிந்த கலைகள், கடவுள் உருவ ஓவியங்கள் மற்றும் ‘கருத்த மச்சான் செவத்தப் புள்ள’ என்கிற ரீதியிலான நாட்டுப்புறப்பாடல்கள் வழியாகவும் சிவப்பின் மீதான நம்பிக்கையை அழகு சார்ந்ததாகக் கற்பிதம் செய்துகொள்கிறாள்.

புற அழகு என்பது நிறம் சார்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. அக அழகைக் கூட்டும் ஆளுமை, தலைமைத்துவப் பண்பு என்பதெல்லாம் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. எனவேதான் பெண்கள் தங்கள் இயற்கையான நிறத்தைச் சற்று சிவப்பாக்கிக்கொள்ள பல அழகுசாதனப் பொருள்களைப் பயன்படுத்துகிறார்கள். உலகமயமாக்கலுக்குப் பின்னர் பெண்களின் பண்பாட்டுத்தளத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான தாக்கம் இது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட ஒன்றிரண்டாக இருந்த அழகு நிலையங்கள் இன்று புற்றீசல்போல் பெருகிவிட்டன. அங்கு பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருள்களால் உலகம் மிகப் பெரிய வணிகச் சந்தையாக மாறியிருக்கிறது. சிவப்புதான் அழகானது என்பதை உலகப் பெருநிறுவனங்கள் தங்கள் வணிக நோக்கத்திற்காக விளம்பரம் செய்யத் தொடங்கின. உலக அளவில் அழகுப் போட்டிகள் நடத்தப்பட்டது மாறி சிறுசிறு நகரங்களில்கூட அழகுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அறிவையும் திறமையையும் சோதிக்கும் கேள்விகள் இருந்தாலும் சிவப்பு நிறம் கொண்ட பெண்களே அதில் பெரும்பாலும் வெற்றிபெறுகின்றனர். வெகு அரிதாக மாநிறமான பெண்களும் கறுப்பு நிறப் பெண்களும் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதுவும்கூட அந்தப் பெண்கள் பிறந்த நாடுகளின் சந்தையை நோக்கி வணிகம் நகர்வதற்கான முனைப்பாகவே இருக்கிறது.

வெற்றிபெறும் பெண் அழகுசாதனப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்படுகிறார். அந்தப் பெண் அந்நிறுவனத் தயாரிப்புகளை விளம்பரப்படுத்திக்கொண்டேயிருக்கிறார். ஏழே நாள்களில் சிவப்பழகு எனப் பெண்களைக் கவர்ந்திழுத்து மூளைச்சலவை செய்து நிறுவனங்கள் தம் விற்பனையைப் பெருக்கிக் கொள்கின்றன. தங்களை அறியாமலேயே சாதாரணப் பெண்கள் மெள்ள மெள்ள ‘சிவந்த நிற’ மாயைக்கு ஆளாகிவிடுகின்றனர்.

பெண்கள்மீது நிகழ்த்தப்படும் மற்றொரு வன்முறை, அவர்களை நுகர்வுப்பண்டமாகப் பார்ப்பது. திரைப்படங்கள் மற்றும் நெடுந் தொடர்களின் நாயகிகள் சிவப்பானவர்களே. அவற்றில் கறுப்புநிறம் குறித்த இழிவான சித்திரிப்பும் நகைச்சுவையும் பாடல்களும் இடம்பெறுகின்றன. சிறு வணிக நிறுவனங்கள் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை வரவேற்பாளராக சிவப்பான பெண்களையே நியமிக்கின்றனர். வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு இத்தகு வழிமுறைகளைக் கையாள்கின்றனர். இங்கு சிவந்த நிறம் அழகு என்பதோடு வணிகம் சார்ந்த கவர்ச்சியாகவும் பார்க்கப்படுவது மிகவும் அவலமானது.

விமானப் பணிப்பெண்களுக்குக் கல்வித் தகுதி, மொழிப்புலமை போன்றவற்றோடு சிவப்பு நிறத்தில் இருப்பது கூடுதல் தகுதியாகக் கருதப்படுகிறது. வரன் தேடும் விளம்பரங்களிலும் ‘சிவப்பு நிறமுடைய அழகான பெண் தேவை’ போன்ற சொல்லாடல்களைப் பார்க்கிறோம். கறுத்த நிறமுடைய ஆண், சிவப்பான பெண்ணைத் தேடுவதும் சிவப்பான பெண் கறுத்த ஆணை மணம் முடிப்பதும்கூட ஆணாதிக்க பெண்ணடிமைத்தனம்தான்.

நிறம் என்பது வெறும் அழகைக் குறிக்கும் ஒற்றைச்சொல் அன்று. அது இனத்தோடு சாதியோடு மதத்தோடு ஒரு சமூக இனக்குழுவோடு தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது. ஆப்ரோ அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்டு நிறவெறி காரணமாக காவலர் ஒருவரால் கொல்லப்பட்டார். உலகமே இதைக் கண்டித்து அமெரிக்காவின் நிறவெறிக்கு எதிராகப் போராட்டத்தை நடத்திவருகிறது. இதன் தொடர்ச்சியாக ஃபேர் அண்ட் லவ்லி என்னும் சிவப்பழகு கிரீம் தயாரிக்கும் நிறுவனம் அதில் உள்ள ஃபேர் என்னும் சொல், கறுப்பு நிறத்தை, கறுப்பு நிறம் கொண்டவர்களை இழிவுபடுத்துகிறது என்று உணர்ந்து அச்சொல்லை நீக்கியிருக்கிறது. இது வரவேற்கத்தக்க மாற்றம்.

என்றாலும், இந்தச்செயல்பாட்டால் அவர்களுக்கு வணிக ரீதியாக எந்த பாதிப்பும் இருக்கப்போவதில்லை. அந்த க்ரீமைப் பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள். நுகர்வோரை இந்தப் பெயர் மாற்றம் ஒன்றும் செய்துவிடவில்லை என்பதுதான் நிதர்சனம். சிவப்புநிறம் குறித்த புரிந்துணர்வை நம்முடைய கலைகள், எழுத்துகள், கல்விமுறை வாயிலாக ஏற்படுத்த வேண்டும். இது குறித்து சமூகத்துடன் ஓர் உரையாடலைத் தொடங்க வேண்டியது மிக அவசியம். இதுதான் நீண்ட கால மாற்றத்தை ஏற்படுத்தும்.

திராவிட இயக்கங்களின் விளைவாக எழுத்து, அரசியல், கலை எனப் பல்வேறு துறைகளில் பெண்கள் செயல்பட்டனர். அவர்கள் யாரும் நிறத்தை ஒரு பொருட்டாகக் கருதியவரல்லர். சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, ஆணாதிக்க எதிர்ப்புபோன்ற கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் களம்கண்டவர்கள் அவர்கள். இங்கு நிறம் பின்னுக்குத் தள்ளப்பட்டு அவர்களின் சமூக மாற்றம் குறித்த தெளிவான சிந்தனைகள், கருத்துகள், திறமை ஆகியவையே அவர்களை மிகச்சிறந்த பெண் ஆளுமைகளாக முன்னிறுத்தின.

சமகாலத்தில், பெரியாரிய, அம்பேத்கரிய மார்க்சியக் கோட்பாடுகளை உள்வாங்கிக் கொண்ட பெண்கள் இயல்பாக இருப்பதையே அழகு என்றும், கல்வி மற்றும் சுயமரியாதை தரும் தன்னம்பிக்கையே அழகு எனவும் கொள்கிறார்கள். கறுப்பு என்பதை இழிவானதாகக் கருதும் கட்டமைப்பை உடைத்து, கறுப்பையே எதிர்ப்பின் நிறமாக, போராட்டத்தின் நிறமாக, பகுத்தறிவின் நிறமாக ஏந்துகிறார்கள்.

சிவப்புநிற சருமம் அழகானது என்னும் மாயையிலிருந்து பெரும்பாலான பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் வெளிவர வேண்டும். அறிவும் திறமையும் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் பெண்களுக்கான ஆளுமை என்பதையும் அந்த ஆளுமையே தம்முடைய அழகைத் தீர்மானிக்கும் என்பதையும் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். நிறத்தினால் உருவாகும் புற அழகு போலியானது, ஆளுமையினால் உருவாகும் அக அழகே நிலையானது என்னும் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும். இத்தகைய சிந்தனைகளை வளர்ப்பதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் முன்வரவேண்டும். இன்றைய இளைய தலைமுறையினரின் பாடத்திட்டங்களில் நிற அரசியல் குறித்தான பாடங்கள் இடம்பெற வேண்டும். திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் இடம்பெறும் நிறம் குறித்த தவறான கருத்துகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். அதுகுறித்த தன்னுணர்வை ஊடகவியலாளர்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இத்தகைய முன்னெடுப்புகளே சிறந்த மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

இன்றைய நாகரிகச் சமூகத்தில் மிகச்சிறந்த ஆளுமையாகப் பெண் வலம் வரவேண்டு மென்றால், அவள் பற்றிக்கொள்ள வேண்டியவை கல்வியும் சுயமரியாதையுமே; மாறாக, சிவப்புநிறம்தான் அழகு என்னும் சூட்டுக்கோல் அன்று.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் அவசியம் சேர்க்க வேண்டிய சத்துமிக்க பானங்கள்!

divya divya

காதலரை தேர்வு செய்யும் பெண்களுக்கு!

divya divya

புதுமண தம்பதியர் ஹனிமூன் சென்றால் வாழ்க்கை முழுமை அடையுமாம்!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!