அமெரிக்கா: உண்மையில் வசதியான நாடா?- மர்மங்களின் கதை

Date:

அமெரிக்காவின் கனவு வாழ்க்கையில் அனைவருக்கும் வீடு இருக்கும். கார் இருக்கும். உடுத்தும் உடை இருக்கும். உணவு இருக்கும். சுகபோகம் நிறைந்திருக்கும். ஆனால் அனைத்துமே கடனில் இருக்கும்.

– ஆர்.எஸ்.ஜெ

2017ம் ஆண்டு. நவம்பர் மாதத்தின் ஓர் இரவு. (பிலேடெல்ஃபியா)Philadelphia நெடுஞ்சாலை.

பிலேடெல்ஃபியாவில் இருந்து நியூ ஜெர்சிக்கு சென்று கொண்டிருந்தார் கேட் மெக்க்ளூர். யாருமற்ற வெளியில் சட்டென கார் வேகம் குறையத் தொடங்கியது. எரிபொருள் குறைந்திருந்தது. சுற்றுவட்டாரத்தில் எரிபொருள் நிலையம் எதுவும் கண்ணுக்கு புலப்படவில்லை. கார் ஓடுவது இனி கேட்டின் கையிலும் இல்லை. தட்டு தடுமாறி நிற்கும் நிலைக்கு கார் சென்று கொண்டிருந்தது. நெடுஞ்சாலை என்பதால் வேறு வழியின்றி காரை சாலையோரத்துக்கு கொண்டு செல்கிறார் கேட். கார் போராடி தன் மூச்சை நிறுத்தியது. வாகனங்கள் மின்மினிகளாய் நெடுஞ்சாலையில் பறந்து கொண்டிருந்தன. மொபைல் ஃபோனும் இறந்திருந்தது. நடுநிசி கேட்டை பதட்டப்படுத்திக் கொண்டிருந்தது.

அமெரிக்க நெடுஞ்சாலைகளின் இரவுகள் அச்சம் நிறைந்தவை. மனித அறிவுக்கு உட்பட்ட எல்லா குரூரங்களின் வாய்ப்புகளும் கொண்டவை. ஏதும் செய்யாமல் அமைதியாக அமர்ந்திருக்க மட்டுமே முடிந்தது கேட்டால். திடுமென சாலையோரத்தில் ஓர் அரவம். எலும்பும் தோலுமாக தாடி நீண்டு ஒரு மனிதன் காரை நோக்கி வந்து கொண்டிருந்தான். சப்த நாடியும் ஒடுங்கியது கேட்டுக்கு. தாடி மனிதன் காரை நெருங்கினான். சாலையோரவாசி போல்தான் அவனும் இருந்தான். எது நடந்தாலும் உதவி கூட கோர முடியாத சூழலில் அமர்ந்திருந்தாள் கேட். காரருகே வந்தவன் குனிந்து, கார் கண்ணாடி வழியாக கேட்டை பார்த்தான். ‘கதவை பூட்டிக்கோங்க… இங்க திருட்டு பயம் ஜாஸ்தி!’. கேட் சட்டென கதவை பூட்டிக் கொண்டாள். தாடி மனிதன் காரை விட்டு அகன்றான். திரும்ப வருவானா என்றெல்லாம் தெரியவில்லை. பயம் மட்டும் நெஞ்சை அரித்துக் கொண்டிருந்தது. சென்றவன் எங்காவது ஒளிந்து கொண்டு நோட்டமிடுகிறானா?

சடாரென தாடி மனிதன் வெளிப்பட்டான். கையில் ஒரு சிவப்பு கேன் இருந்தது. அவன் யார் என்ன என்றேல்லாம் கேட்டுக்கு தெரியாது. ஆனால் கேட்டின் கார் கிளம்புவதற்காக தன் கைவசம் இருந்த கடைசி 20 டாலர் பணத்தை கொண்டு எரிபொருள் வாங்கி வந்திருந்தான். தாடி மனிதனின் உதவியில் கேட் பத்திரமாக அந்த இரவு வீடு சேர்ந்தாள். ஓர் அற்புத கதையாக பிற்காலத்தில் பேசப்பட்ட அச்சம்பவத்தில் வந்த தாடி மனிதனின் பெயர் ஜானி பாபிட் ஜூனியர். முன்னாள் ராணுவ வீரர். எந்த தன்னலமும் கருதாமல் கேட்டுக்கு பாப்பிட் உதவிய சம்பவம் அமெரிக்காவையே நெகிழ வைத்தது.

சாலையோரவாசிகளை பற்றிய அமெரிக்காவின் பொது பிம்பத்தை அசைத்து பார்த்தது. அமெரிக்காவை போலவே கேட்டுக்கும் அவர் கணவர் டெமிக்கோவுக்கும் பாப்பிட் மீது அபிமானம் பிறந்தது. அமெரிக்காவின் சாலையோரவாசிகளின் முகமாக பாப்பிட் ஊடகங்களில் கொண்டாடப்பட்டார். சாலையோரவாசத்திலிருந்து பாப்பிட்டை மீட்டு தங்களின் கைமாறை செய்ய கேட்டும் டெமிக்கோவும் உறுதி பூண்டார்கள். பாப்பிட்டுக்கென ஒரு வீடும் நல்லதொரு வாழ்க்கையும் அமைத்து கொடுத்திட விரும்பினர்.

கேட்டும் டெமிக்கோவும் இணையத்தில் நிதியுதவி திரட்ட அழைப்பு விடுத்தனர். பாபிட்டுக்கு நல்லதொரு வாழ்க்கையும் கிடைக்கும் என்ற எண்ணத்தை முன்வைத்து நிதி திரட்ட தொடங்கினார்கள். நிதித்தேவையாக அவர்கள் அறிவித்திருந்தது பத்தாயிரம் டாலர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை அமெரிக்க மக்கள் தாண்டி சென்றனர். சில வாரங்களிலேயே நான்கு லட்சம் டாலர் நிதி திரண்டது. இணையம் வழி திரண்ட மனித நேயத்தை ஊடகங்கள் கொண்டாடின. பல சாலையோரவாசிகளுக்கு பாபிட் பெரும் நம்பிக்கையாக இருந்தார். கேட்டையும் டெமிக்கோவையும் மக்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆனால், சாலையோரவாசிகளின் தேவை வெறும் நிதியோ கருணையோ அல்ல என்பதை அச்சம்பவம் வெகு சீக்கிரமே உணர்த்தவிருந்தது.

வசதியான நாடா அமெரிக்கா?

மேற்கு நாடுகளிலேயே வசதியான நாடாக அறியப்படும் நாடு அமெரிக்கா. அமெரிக்காவின் வாழ்க்கைச்சூழல் உலகின் எல்லா மக்களுமே அடைய விரும்பும் கனவாக இருக்கிறது. Freedom, American Dream என்றெல்லாம் அமெரிக்க வாழ்க்கை பல ஆபரணங்களையும் அடைமொழிகளையும் கொண்டது. அதே அமெரிக்காவில்தான் வீடுகளுக்கு கூட வழியின்றி சாலையோரம் வசிக்கும் பெரும் கூட்டமும் இருக்கிறது.

ஜானி பாபிட் ஜூனியரை போன்ற பல சாலையோரவாசிகளுக்கு அமெரிக்கா சூட்டியிருக்கும் பெயர் Homeless.ஹோம்லெஸ் மக்கள் என அழைக்கப்படும் சாலையோரவாசிகள் யார் தெரியுமா? அமெரிக்காவின் ஏழைகள்!

சாலையோரவாசம் அமெரிக்காவில் மிகச் சாதாரணமாக காணப்படுவதென்றாலும் அதிகமாகத் தொடங்கியது 1930 -களின் போதுதான். 1929ம் ஆண்டு அமெரிக்க பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. வரலாறு காணாத பொருளாதார பின்னடைவை அமெரிக்கா சந்தித்தது. பங்குச்சந்தையை சார்ந்து இயங்கிய தொழில்களும் நிறுவனங்களும் கடுமையான முடக்கத்துக்கு உள்ளாகின. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பெரும்பகுதி மக்கள் வேலைகளை இழந்து நடுத்தெருவுக்கு வந்தனர். தங்களை காப்பாற்றிக்கொள்ள வீட்டு உரிமையாளர்களும் வாடகையை அளவுக்கதிகமாக உயர்த்தினார்கள்.

அமெரிக்காவின் கனவு வாழ்க்கையில் அனைவருக்கும் வீடு இருக்கும். கார் இருக்கும். உடுத்தும் உடை இருக்கும். உணவு இருக்கும். சுகபோகம் நிறைந்திருக்கும். ஆனால் அனைத்துமே கடனில் இருக்கும். வங்கிகள் தங்களின் வரவை மக்கள் அடைக்கப்போகும் நாளை முன்வைத்தே சம்பாதித்து வந்தன. வங்கி, வீடு என எல்லா இடங்களிலும் கடன் என்ற வார்த்தை மட்டுமே இருக்கும். கத்தையாக நாமே நம் கையில் ஸ்பரிசித்து உணரும் பணம் எங்குமே இருக்காது.

இல்லாததை நம்பி இல்லாததை கொடுக்கும் கதை!

பலமுறை வரலாற்றில் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தாலும் வால்ஸ்ட்ரீட்டில் இயங்கும் நிறுவனங்கள் திவாலாகாமல் காப்பாற்றுவதை மட்டுமே தன் பணியென அமெரிக்க அரசு செய்து வருகிறது. ஒரே தவறை திரும்பத் திரும்ப செய்து, அவற்றிலிருந்து தப்பிக்கும் வழியை மட்டுமே விதவிதமாக தேடுகிறது. அதிலொரு விதம்தான் அமெரிக்கா சந்திக்கும் பொருளாதார பின்னடைவை பிற நாடுகளுக்கும் பரப்புவது. எந்த பின்னடைவின் போதும் தெருவுக்கு தள்ளப்படும் அமெரிக்கர்களை பற்றி அரசு கண்டு கொண்டதே இல்லை. அது பாப்பிட்டை போன்ற முன்னாள் ராணுவ வீரராக இருந்தாலும் கூட. பத்தாயிரம் டாலர்கள் தேவையென தொடங்கிய நிதித்தேடல் நான்கு லட்சம் டாலர்களை குவித்த பிறகு தொடங்கியது பிரச்னை.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார் பாப்பிட். பணத்தில் தனக்கு மிக சொற்பமான பங்கு வழங்கப்பட்டதாக புகார் தெரிவித்தார். மீண்டும் தெருவுக்கு வந்துவிட்டதாக சொல்லியிருந்தார். போதைப் பழக்கமும் தொடர்ந்திருக்கிறது. திரண்ட நிதியில் கேட்டும் டெமிக்கோவும் பாப்பிட்டுக்கு வீடு வாங்கிக் கொடுக்கவில்லை. உபயோகிக்கப்பட்ட ஒரு வேனை மட்டும் வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். இருவரும் இருக்கும் வீட்டுக்கு அருகே ஜூன் மாதம் வரை அந்த வாகனத்தில் பாப்பிட் தங்கி வாழ்க்கை ஓட்டலாம் என சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில், டெமிக்கோவும் கேட்டும் புது BMW கார் வாங்கியிருக்கிறார்கள். வெளியூர்களுக்கு உல்லாச பயணங்கள் சென்றிருக்கின்றனர். சூதாட்டங்கள் விளையாடி இருக்கின்றனர். பேட்டி வெளியானதும், கேட்டின் தரப்பிலிருந்து பதில் தரப்பட்டது. பாப்பிட்டுக்கு கொடுக்கப்பட்ட 25,000 டாலர் பணத்தை அவர் சில வாரங்களிலேயே போதை மருந்துக்கு செலவழித்து விட்டார் என குற்றஞ்சாட்டப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,400-ஐ கடந்தது; மீட்புப் பணிகள் தீவிரம்

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 1,400-ஐ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்