29.8 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

யூனியன் கல்லூரியின் அனைத்து காணி உரிமையும் தென்னிந்திய திருச்சபையுடையது; எமது புனிதத்தை அமெரிக்கன் மிசன் குருமார் கெடுக்கிறார்கள்: பேராயர் டானியல் தியாகராஜா!

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ள வளாகம் உண்மையில் தென்னிந்திய திருச்சபைக்கு சொந்தமானது. தவறான தரப்பினராக- இலங்கை அமெரிக்கன் மிசன் திருச்சபையினர் இதில் சம்மந்தப்பட்டுள்ளதாக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

இப்படியானவர்கள் எமது புனிதமான வரலாற்றை குலைக்கிறார்கள். 2007இல் தொடங்கிய திருச்சபையினராகிய இவர்கள், 1816ஆம் ஆண்டில் தொடங்கிய திருச்சபையை பற்றி பேச முடியாது.அவர்கள்  வரலாற்றை திரிபுபடுத்த முயல்வதால் இன்று பேசுகிறேன் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திருச்சபை பேராயர் இல்லத்தில் இன்று (11) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வரலாற்றை தெரியாதவர்களும் வரலாற்றைப் புரிந்து கொள்ளாதவர்களும் புரிந்து கொள்ள மறுப்பவர்கள் எப்பொழுதும் தவறான செய்திகளை வழங்குவார்கள். 1816 ஆம் ஆண்டில் அமெரிக்க திருத்தொண்டர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தார்கள். அவர்கள் ஆரம்பித்த முதலாவது கல்லூரி யூனியன் கல்லூரி. அமெரிக்க திருத்தொண்டர்கள் அங்கு அதிபர், ஆசிரியராக இருந்தார்கள்.

அந்த வளாகத்துக்குள் அமைந்து சர்ச்சைக்குள்ளாகி உள்ள இந்த இல்லம் அந்த நாட்களில் இருந்து அதிபர் மனையாக உபயோகிக்கப்பட்டு வந்தது. அமெரிக்க திருத் தொண்டர்களின் பணிக்காலம் நிறைவு பெற்றது எங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிபர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களும் தொடர்ந்து அந்த இல்லத்திலேயே வசித்து வந்தார்கள். தெல்லிப்பளையில் திருச்சபை ஒன்றும் அமெரிக்க திருத்தொடர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அதுவும் இந்த வளாகத்திலேயே இருக்கின்றது.

இந்த ஆலயத்தின் குருவானவர் தெல்லிப்பளை சந்தியில்  திருச்சபைக்கு சொந்தமான இருந்த காணியின் இருந்த குருமனையில் வாழ்ந்து வந்தார். சுதேச அதிபர்களில் முக்கியமானவர் ஐ.பி.துரைரட்ணம் அவர்கள். அவர் கடைசியாக இந்த இல்லத்திலேயே வசித்தார். 1960 ஆம் ஆண்டளவில் அவர் ஓய்வுபெற்ற பின்னர் அந்த இல்லத்தில் ஒருவரும் பசிக்கவில்லை.

சில வருடங்களுக்கு பின்னர் தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண பேராயராக இருந்த சபாபதி குலேந்திரன் அரசுடன் தொடர்பு கொள்ள தொடங்கி இந்த இல்லம் அதிபர் மனையாக கருதப்பட்டாலும், மினசரிக்குரியதென்றும், அதில் வசிக்க அனுமதிக்கமாறும் கேட்டுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து வந்த பேராயர் டிஜே.அம்பலவாணர் இந்த விடயத்தில் முனைப்பாக செயல்பட்டு அரசுடன் பேச்சு நடத்தினார். இதன் விளைவாக, சந்தியில் உள்ள திருச்சபைக்கு சொந்தமான காணியை அரசுக்கு வழங்குவதன் ஊடாக, அதிபர்கள் மனையை தென்னிந்திய திருச்சபையினர் மாற்றீடு செய்து கொண்டனர்.

இது பற்றிய அரசாங்க அறிவிப்பு பிரதி என்னிடமுள்ளது. ஏக காலத்தில் சாவகச்சேரி டிரிபேக் கல்லூரியில் ஒரு பிரச்சனை எழுந்தபோது, அங்கேயும் அவர்கள்மாற்றீடு செய்து கொண்டார்கள். இப்போது அங்குள்ள எமது குரு வசிக்கும் இடம், அப்போது டிரிபேக் கல்லூரி அதிபர்கள் வசிப்பிடமாக கருதப்பட்ட இடம். ஒரு நிலப்பகுதியை  திருச்சபையினர் வழங்கியதால், அரச பிரகடனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேகாலப்பகுதியில் அச்சுவேலி மத்திய கல்லூரி, உடுப்பிட்டி, நெடுந்தீவு, நவாலியில் என அப்போது 7 இடங்களில் இடம் மாற்றப்பட்டதற்கான ஆவணங்கள் என்னிடமுள்ளன.

யூனியன் கல்லுரியின் காணி உறுதிப்பத்திரங்கள் எமது மிசனின் பெயரிலேயே உள்ளன.

1960 ஆம் ஆண்டில் அரசு காணி சுவீகரிப்பு நடந்தபோது திருச்சபையானது யூனியன் கல்லுரியை அரசுக்கு வழங்கினார்கள். ஆனால் அதற்கு நிபந்தனைகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே அவை வழங்கப்பட்டன. கல்வி நோக்கத்திற்காக வழங்கப்பட்ட காணி எப்பொழுது அந்த நோக்கம் நிறைவேற்றப்படாமல் இருக்கிறதோ அப்போது காணிக்கை மீண்டும் திருச்சபைக்கு சொந்தமாகும் என்பதே அந்த நிபந்தனை. இப்படியான நிபந்தனையின்படி நாம் பல காணிகளை மீள பெற்றுள்ளோம். உதாரணமாக வேலணை.

யூனியன் கல்லூரியின் ஒவ்வொரு பகுதிக்குமான காணி ஆவணங்கள் என்னிடமுள்ளன. கல்வி நோக்கம் பிறழப்படும் போது எம்மிடமே அவை வரலாமென்பதால், ஆவணங்களை பேராயர் என்ற ரீதியில் பேணி வருகிறேன்.

இப்பொழுது திடீரென குருமார் இல்லம் சர்ச்சையாகியுள்ளது.

இதன் பின்புலத்தையும் நான் சொல்ல வேண்டும்.

இந்த ஆலயமும் இந்தக்குருமனையும் தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண அத்தியட்சகராலயத்தினால் பராமரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. நாட்டில் போர் சூழ்நிலை தோன்றியபோது தெல்லிப்பளை சார்ந்த மக்கள் இடம்பெயர்ந்தார்கள். கல்லூரி சமூகம் இடம்பெயர்ந்து, மருதனார்மடத்தில் இயங்கியது. யூனியன் கல்லூரி இருந்த பகுதி சூனியப் பிரதேசமாக கருதப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் திருச்சபையும் இடம்பெயர்ந்தது.

2009 இல் போர் முடிந்ததும், அரசுடன் பேசி, சூனியப்பிரதேசத்தில் இருந்த குருமனையை நானும், செயலாளரும் அடிக்கடி சென்று பார்த்து வந்தோம்.

2009 தொடக்கம் பலாலி ராணுவ தலைமையகத்தில் அனுமதி பெற்று, ஒவ்வொரு கிறிஸ்மஸ் மற்றும் வருட பிறப்பில் அங்கு பூசை நடத்தி வந்தோம்.

2012ஆம் ஆண்டில் திடீரென, இப்பொழுது பிணக்குடன் சம்மந்தப்பட்ட அந்த சபைப்பிரிவினர்  இந்த ஆலயத்தை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று அவர்கள் அந்த ஆலயத்தை தமது உடைமையாக்கிக் கொண்டார்கள். இது குறித்த முறைப்பாட்டை தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் 2012.08.11 அன்று முறைப்பாடு செய்திருந்தேன். பொலிசார் அந்த வழக்கை நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதாக சொன்னார்கள். அது நிலுவையில் உள்ளது.

ஆaராகிய என்னுடைய வேண்டுகோளின்படி இராணுவத்தினரால் அந்த குருமனை எம்மிடம் கையளிக்கப்பட்டது என்பதற்கான சான்றுகள் உள்ளன. அப்படியிருக்க அவர்கள் உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார்கள். பிணக்கு வரக்கூடாது என்பதற்காக அமைதியாக இருந்தோம்.

2007 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் திகதி தங்களை இலங்கை அமெரிக்கன் மிஷன் திருச்சபை என சொல்லிக்கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கிய இந்த கூட்டத்தினர் தான் எங்களுக்கு இந்த வேலையைச் செய்தார்கள். இன்று தெல்லிப்பழையில் பாடசாலைக்கு செய்திருக்கிறார்கள்.

இவர்கள் இப்படி செய்வது முதல் தடவை அல்ல. பண்டத்தரிப்பு சந்தியில் அமைந்துள்ள எங்களுடைய குருமனை, எங்களுடைய ஆலயத்தை உடைத்துக் கொண்டு அவர்கள் உள்ளே போய்விட்டார்கள். யாழ் மேல் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அந்த கட்டிடம் எங்களுக்கு சொந்தமானது என கட்டளை இருந்தும் அதை உடைத்துக் கொண்டு போய் இருந்தார்கள். அதை நாம் வழக்குக்கு கொண்டு சென்று இருக்கிறோம். அது நிலுவையில் உள்ளது.

இப்பொழுது யூனியன் கல்லூரியை போல உடுவில் மகளிர் கல்லூரி வளாகத்தில் இருந்த பிரதானமான ஆலயத்தையும் உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார்கள். உடைத்த காணொளி எங்களிடம் உண்டு. அதுவும் கிறிஸ்மஸ் காலத்தில் செய்தார்கள். அது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் எங்களின் சட்டஆலோசகர் ஊடாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஒரு தகவலை அனுப்பினேன். யூனியன் கல்லுரியும், அமெரிக்கன் மிசன் திருச்சபையும் சர்ச்சையில் ஈடுபடுகிறார்கள், ஆனால் எமக்கும் கல்லூரிக்கும்தான் சர்ச்சை வந்திருக்க வேண்டுமென்ற செய்தியை கொடுத்திருந்தோம்.

அப்படி இருந்தும் கல்வியமைச்சின் செயலாளர் அந்த இரண்டு சாராiரயும் விளக்கத்துக்கு கூப்பிட்டிருந்தார். பத்திரிகை வாயிலாக அறிந்தோம் அவர் திடீரென அந்த வாளகம் கல்லூரிக்கே சொந்தம் என தீர்ப்பு கொடுத்திருந்தார்.

அப்போது பிரதேசசபை தவிசாளர் ஊடாக கல்லூரி அதிபருக்கு ஒரு செய்தியை கொடுத்தேன். அவர்கள் தவறான ஆட்களுடன் சம்பந்தப்படுகிறார்கள், சரியான ஆட்களுடன் பேச வேண்டுமென சொன்னேன்.

அதன்படி கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் வந்தார்கள். 1939ஆம் ஆண்டு வரைபடத்தை காண்பித்து அவர்களிடம் பேசினோம். உங்களிற்கு காலாகாலமாக பாவிக்க இதனை தந்தோம், நீங்கள் அதை எடுத்துக் கொள்ளாததால் பிரச்சனை வந்தது என்பதை சொன்னோம். சரியான உரிமையாளர்களான எம்முடன் பேசினால், அந்த குருமனையை ஒப்பந்தத்தின் மூலம் நீண்டகால பாவனைக்கும் தர தயாராக இருக்கிறோம் என்றேன். சரியான ஆட்களுடன் தொடர்பு கொள்ளுங்கள், பிரச்சனையை தீர்க்கலாம் என்றேன்.

எமது திருச்சபை கல்விக்கு முக்கியத்துவம் வழங்குவது. யூனியன் கல்லூரி எமது முதலாவது கல்லூரி. அந்த கல்லூரியின் நடவடிக்கைகைளில் நாம் அதிக அக்கறையுடன் இருப்போம். அன்று நடந்த சம்பவத்தை பார்க்க மிக வேதனையாக இருந்தது. அந்த சபையென கூறும் குருமார் அங்கு நிற்கிறார்கள். அவர்களிற்கு பொறுப்பானவர் நிற்கிறார். இவர் ஏற்கனவே நடந்த உடைப்புகளில் சரீரரீதியாக பங்கு பற்றியமைக்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன.

இப்படியானவர்கள் எமது புனிதமான வரலாற்றை குலைக்கிறார்கள். 2007இல் தொடங்கிய திருச்சபையினராகிய இவர்கள், 1816ஆம் ஆண்டில் தொடங்கிய திருச்சபையை பற்றி பேச முடியாது. எம்மிலிருந்து பிரிந்து சென்று, சபை ஆளுகை அமைப்பாக மாறியவர்கள். வரலாற்றை திரிபுபடுத்தக் கூடாதென்பதாலேயே நான் இன்று பேசினேன்.

1816ஆம் ஆண்டு அமெரிக்கன் இலங்கை மிசன் திருத்தொண்டர்கள் வந்தார்கள். அவர்கள் இங்கே சபைகளை ஆரம்பித்தார்கள். தெல்லிப்பளை, உடுவில், வட்டுக்கோட்டை, பண்டத்தரிப்பு, சாவகச்சேரி , மானிப்பாய் என பல உள்ளன. அவர்கள் சபை ஆளுகை மரபை கொண்டவர்கள்.

1905ஆம் ஆண்டில் இலங்கை சபை ஆளுகை கவுன்சில் என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

1908ஆம் ஆண்டில் பல சபைகளுடன் சேர்ந்து உரையாடல் ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்க திருத்தொண்டர்கள் ஆரம்பித்த இலங்கையிலுள்ள இந்த சபை, மதுரை, சென்னை, திருவாங்கூரில் ஆரம்பிக்கப்பட்ட சபைகள் எல்லாம் ஒரே ஆட்களால் ஆரம்பிக்கப்பட்டதால் அவர்கள் எல்லோரும் ஒன்றாக விரும்பினார்கள். அதனால் 1910ஆம் ஆண்டில் தென்னிந்திய ஐக்கிய சபை என்ற பெயரை அது பெற்றுக்கொண்டது. தென்னிந்திய ஐக்கிய சபையின் யாழ்ப்பாண கவுன்சிலாக யாழ்ப்பாணம் வந்தது.

எங்களுடைய முதலாவது தலைவராக சபாபதி குலேந்திரன் வந்தார். எமது முறை சபைஆளுகையானது.

1919ஆம் ஆண்டில் தரங்கம்பாடியில் நடந்த உரையாடலின் விளைவாக 1947 செப்ரெம்பர் 27ஆம் ஆண்டு தென்னிந்திய திருச்சபையாக மாறியது. அப்போது ஆளும் முறையை பேராயர் முறையாக மாறியது. அதையடுத்து, தலைவராக இருந்த சபாபதி குலேந்திரன் பேராயராக மாறினார்.

14 பேராலயங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் இருந்தது.

அப்போதிருந்த அமெரிக்க திருத்தொண்டர்கள், அதே வருடம் ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தமது பொறுப்பை, உடைமைகளை, ஊழியங்களை தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண அத்தியட்சகராலயத்திடம் ஒப்படைத்தனர்.

1908ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்ற சட்ட ஆணையின் ஊடாக அமெரிக்கன் இலங்கை மிசனை ஒரு ஸ்தாபனமாக ஏற்படுத்திக் கொண்டார்கள்.  அதன் அடிப்படையில், இதனது இலட்சினை தலைவராகிய பேராயராகிய என்னிடமுள்ளது. அந்த இலட்சினையை பொறித்தால்தான் எந்த உடைமையும் விற்கவோ, வாங்கவோ முடியும்.

இந்த இலட்சினை உள்ளதா என அந்த சபையினரிடம் கேட்டால் தலையை குனிவார்கள்.

 

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

ஈஸ்டர் தாக்குதல்: முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கவே பிள்ளையான் புத்தகம் எழுதினார்… கருணா அம்மான் அதிர்ச்சி தகவல்!

Pagetamil

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

Leave a Comment