சம்பள நிர்ணய சபை அங்கீகரித்த தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை தோட்ட நிறுவனங்கள் நேற்று (09) வழங்கியுள்ளன.
இதற்கமைவாக நாள் ஒன்றிற்கான அடிப்படை சம்பளம் 900 ரூபாவும், வரவு செலவு கொடுப்பனவாக 100 ரூபாவும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அவர்களின் நாளாந்த சம்பளம் 750 ரூபாவாக காணப்பட்டது.
1,000 ரூபா சம்பளம் தொடர்பில் நீண்ட காலமாக தோட்ட நிறுவனங்களுக்கும், தொழிற் சங்கங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. 1,000 ரூபா நாளாந்த சம்பள விடயம் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை, நாளாந்த சம்பளம் 1,000 ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அரசாங்கத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும், தோட்டத் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலையீட்டில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்திருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்திருக்கிறார்.
கொட்டகலயில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.