தன்னுடன் பழகிய பெண் திடீரென விலகி தனது கணவருடன் சேர்ந்து வாழ முடிவெடுத்ததை ஏற்றுக்கொள்ளாத நபர், அப்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து, அதே தீயில் சிக்கி தானும் பலியானார்.
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிளாட்பாரத்தில் வசித்து வந்தவர் சாந்தி (46). திருமணமான இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். இன்னொரு திருமணம் செய்து அதுவும் பிரச்சினையாகி பிரிந்துள்ளார். பின்னர் சாந்தி கோயம்பேடு பேருந்து நிலையத்தில், ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்து, அங்கேயே தங்கியிருந்தார்.
அந்த நேரத்தில் சாந்திக்கும், முத்து (48) என்பவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், சாந்தி தனது இரண்டாவது கணவருடன் மீண்டும் பேசத் தொடங்கியுள்ளார். இது முத்துவுக்குப் பிடிக்கவில்லை. இதனால் சாந்தியிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவும் இதேபோன்று தகராறு நடந்துள்ளது. பின்னர் சாந்தி தனது துப்புரவுப் பணியை முடித்துக்கொண்டு வழக்கமாகத் தான் தூங்கும் கோயம்பேடு பயணிகள் தூங்கும் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார்.
முத்துவுக்குக் கடுமையான கோபம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு நள்ளிரவில் சாந்தி உறங்கும் பகுதிக்கு வந்துள்ளார் முத்து. சாந்தி உறங்கும் இடத்தை அடைந்தவுடன் கையில் உள்ள பெட்ரோல் கேனைத் திறந்து அவர் மீது ஊற்றியுள்ளார். பெட்ரோல் தெறித்ததில் அக்கம் பக்கம் உறங்கியவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர்.
பெட்ரோல் தன் மீது ஊற்றப்பட்டவுடன் தூக்கத்திலிருந்து சாந்தி, பதறி எழுந்து பார்த்துள்ளார். கையில் பெட்ரோல் கேனுடன் முத்து நிற்பதைப் பார்த்து அங்கிருந்து தப்ப நினைக்கும்போதே, திடீரென முத்து கையில் வைத்திருந்த லைட்டரால் பற்ற வைத்தார். முத்து மீதும் பெட்ரோல் தெறித்து அது சுற்றிலும் வாயுவாகச் சூழ்ந்திருந்த நிலையில் தீ வைத்தவுடன் பத்தடி சுற்றளவுக்குத் தீப்பற்றியது. தீயில் சாந்தியும் முத்துவும் சிக்கிக்கொண்டனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த நிகழ்வைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி அடித்து ஓடியுள்ளனர். இதைப் பார்த்த அக்கம் பக்கமிருந்த தொழிலாளர்கள், போலீஸார் ஓடிவந்து தீயை அணைத்து தீக்காயத்துடன் உயிருக்குப் போராடிய இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், முத்து 70 சதவீதம் தீக்காயம் அடைந்த நிலையிலும், சாந்தி, 90 சதவீதம் தீக்காயம் அடைந்த நிலையிலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்தனர். இன்று மதியம் சாந்தி, முத்து ஆகிய இருவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து, கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாந்தியை எரித்துக் கொல்லலாம் என முடிவெடுத்த முத்து பெட்ரோலின் தன்மை தெரியாமல் தீ வைத்துள்ளார். பெட்ரோல் ஊற்றப்பட்டால் அது வாயுவாக 5 அல்லது 6 அடிக்குப் பரவும் தன்மை கொண்டது. அதனால்தான் பெட்ரோல் ஊற்றி எரித்தபோது அது முத்துவையும் பற்றிவிட்டது என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.