2021ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகிப் போட்டியில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பில் 2020 ஆம் ஆண்டில் திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி மற்றும் மொடல் அழகி சுலா பத்மேந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள புஷ்பிகா டி சில்வா, கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் கரோலின் ஜூரிக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.
திருமதி இலங்கை அழகி போட்டியில் புஷ்பிகாவுக்கு முடிசூட்டப்பட்டு சிறிது நேரத்தில் ஜூரி, அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதாவது, வெற்றியாளர் விவாகரத்து செய்யப்பட்டவர். அத்தகைய ஒருவர் இதில் போட்டியிட முடியாது. எனவே இரண்டாவது வெற்றியாளர், முதலாவது வெற்றியாளராக தெரிவு செய்யப்படுகிறார் என அறிவித்தார்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்ததுடன் பாதிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா, தான் விவாகரத்தானவர் இல்லை என அறிவித்ததுடன் பொலிஸிலும் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜீரியின் இந்த அறிவிப்பு உண்மைக்கு புறம்பானது என ஏற்பாட்டுக்குழு விளக்கம் அளித்ததோடு, பின்னர் புஷ்பிகாவை வெற்றியாளராக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திரா ஆகியோர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது. கிரீடம் கழற்றும் போது தனக்கு தலையில் காயம் ஏற்பட்டது என புஷ்பிகா டி சில்வா மருத்துவ அறிக்கை சமர்ப்பித்தார்.
இதையடுத்து, கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.