நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவை கழுதை என்று அழைத்தமைக்காக, அமைச்சர் சமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் இல்லாமலாக்கப்பட்டமை பழிவாங்கல் நடவடிக்கையென எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியது. இதன்போது சூடான நிலைமை ஏற்பட்டது.
அப்போது உரையாற்றிய சரத் பொன்சேகா, 2010ஆம் ஆண்டில் தனது நாடாளுமன்ற அங்கத்துவம் இல்லாமலாக்கப்பட்டதை சுட்டிக்காட்டி பேசினார்.
அப்போது குறுக்கிட்ட அப்போதைய சபாநாயகரும், தற்போதைய அமைச்சருமான சமல் ராஜபக்ச, பென்சேகாவின் குற்றச்சாட்டை நிராகரித்து, அவரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர நடவடிக்கையெடுத்ததாக தெரிவித்தார்.
இதன்போது, பொன்சேகாவை கழுதை என்றும், சமல் ராஜபக்ஷ திட்டியதை தொடர்ந்து, சூடான வார்த்தை பரிமாற்றம் நடந்தது.
“”கழுதையா? நீ தான் கழுதை ”என்று பொன்சேகா பதிலடி கொடுத்தார்.
இதை தொடர்ந்து இருவருக்குமிடையிலான வார்த்தை மோதல் நடந்தது. அப்போது, வெளியே வந்து தன்னை எதிர்கொள்ளும்படி சமல் சவால் விடுத்தார்.
நாடாளுமன்றம் தற்காலிகமாக 5 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், மீள ஆரம்பித்த போது சமல் ராஜபக்ச தனது நடத்தைக்கு மன்னிப்பு கோரினார்.
தான் சொன்ன விஷயங்களின் விளைவாக யாருடைய உணர்வையும் புண்படுத்தினால் மன்னிப்பு கேட்க விரும்புவதாக அவர் கூறினார்.