யாழ் நகரில் பொது நிறுவனம் உள்பட 5 இடங்களில் திருட்டுக்களில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் திருட்டுப் பொருள்களை வாங்கிய பெண் உட்பட இருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 40 லட்சம் ரூபாய் பெறுமதியான திருடப்பட்ட பொருள்கள் கைப்பெற்றப்பட்டுள்ளன.
நல்லூர் பகுதியைச் சேர்த்த ஆண் ஒருவர் 30 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியான இலத்திரனியல் பொருள்களை மிகவும் குறைந்த தொகைக்கு அடகு பிடித்து வைத்திருந்த நிலையில் கைப்பற்றப்பட்டன. திருநெல்வேலியைச் சேர்ந்த பெண் ஒருவர் தையல் இயந்திரங்களைக் கொள்வனவு செய்து வைத்திருந்த நிலையில் கைப்பற்றப்பட்டன.
திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் மணியந்தோட்டத்தைச் சேர்ந்தவர். அவரிடமிருந்து 2 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர்கள் நேற்று (5) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் ஏ-9 பிரதான வீதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்று, தையல் கடை, அரியாலை பிலிதோபியா தேவாலயம் மற்றும் வீடு இரண்டு என 5 இடங்களில் திருட்டுக்கள் இடம்பெற்றமை தொடர்பில் அண்மையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் கிடைத்தன.
அதிகாலை வேளையிலேயே இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றமை தொடர்பில் முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் திருட்டுப் பொருட்கள் மீட்கப்பட்டதுடன், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.