மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் மற்றும் ஈச்சலவக்கை போன்ற கிராம மக்களின் வாழ்வாதார காணிகளை இராணுவம் கையகப்படுத்தி வருகின்ற நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று வியாழக்கிழமை (1) காலை குறித்த பகுதிக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு நிலமைகளை பார்வையிட்டார்.
குறித்த விஜயத்தின் பின் பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்,
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார்,ஈச்சலவக்கை ஆகிய கிராமங்களில் சுமார் 400 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
யுத்தத்திற்கு பின்னர் குறித்த குடும்பங்களுக்கு அவர்கள் மீள் குடி இருப்பதற்கு மாத்திரமே காணிகள் வழங்கப்பட்டது.
அந்த மக்களுக்கு விவசாய காணி அல்லது வாழ்வாதார காணியே வழங்கவில்லை.
தொடர்ச்சியாக அந்த மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக காணியை கேட்டு அரச திணைக்களங்களில் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது விடத்தல் தீவு இராணுவ பயிற்சி பாடசாலை என இராணுவத்தினால் அழைக்கப்படுகின்ற சன்னார் பயிற்சி முகாமிற்கு அருகாமையில் ஏற்கனவே அவர்கள் 400 ஏக்கர் காணியை வன இலாகா திணைக்களத்திடம் இருந்து விடுவித்து தாங்கள் வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
ஆனால் தற்போது சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை குறிப்பாக மக்களின் கிராமத்திற்கு நேராக உள்ள காணியில் மூன்று குளங்கள் உள்ளது.
-குறித்த குளங்களில் இந்த பகுதி மக்கள் மீன் பிடியில் ஈடுபடுவதும்,தற்போது இராணுவம் பிடித்துள்ள பிரதேசத்தில் மக்களுக்கான பொது மயானம் காணப்படுகின்றது.
மேலும் குறித்த 400 குடும்பத்தில் உள்ள சிலர் கால் நடை பண்ணையாளர்களாக உள்ளனர்.
அவர்கள் இந்த பிரதேசத்தில் கால்நடைகளை தொடர்ச்சியாக கொட்டகை அமைத்து பராமரித்து வந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக 400 ஏக்கர் காணியுடன் மேலதிகமாக பல ஏக்கர் காணிகளை இராணுவம் வீதி ஓரமாக துப்பரவு செய்து கட்டைகளை போட்டு அடைத்து வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக கடந்த மாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சினுடைய ஆலோசனைக்கூட்டத்தில் என்னால் இந்த பிரச்சினை முன் மொழியப்பட்டது.
அதற்கு தலைமை தாங்கிய அமைச்சர் சமல் ராஜபக்ஸ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன ஆகியோர் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து அடுத்த கூட்டத்தில் பதில் வழங்குவதாக கூறி இருந்தனர்.
கூட்டம் கடந்த வரும் 25 ஆம் திகதி இடம் பெறுவதாக இருந்தது. எனினும் குறித்த கூட்டம் இடம் பெற வில்லை. தற்போது குறித்த காணி விடயம் தொடர்பாக மக்கள் என்னிடம் தொடர்ச்சியாக முறையிட்டு வந்தனர். அதற்கமைவாக இன்று (1) வியாழக்கிழமை காலை குறித்த பகுதிக்கு சென்று நிலமையை அவதானித்தேன்.
மக்கள் கூறியது போல் குறித்த பகுதியில் காணிகள் பிடிக்கப்பட்டு இராணுவத்தினால் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றது. புதிதாக இடங்களை அடைத்து வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் இராணுவத்தின் கட்டளை தளபதியுடன் தொடர்பு கொண்டு வினவினேன். எனினும் தாங்கள் மேலதிகமாக காணி பிடிக்கவில்லை என தெரிவித்தார்.
மக்களின் வாழ்வாதார காணிகளை இராணுவம் பிடித்து வாழ்வாதாரத்தை இல்லாது செய்கின்றனர். அரசாங்கம் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து வருகின்றது.
எனவே அரசாங்கள் இவ்வாறான செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி சன்னார், ஈச்சலவக்கை பகுதியில் வசிக்கின்ற 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆகக் குறைந்தது 1 ஏக்கர் காணியாவது விவசாயத்திற்கு வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இராணுவம் பெற்றும் வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மக்களுக்கு இடையூராக இருக்க கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.