மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் ஜோசப்வாஸ் நகரை சேர்ந்த பூபாலசிங்கம் அருள்ராஜ் (36) என தெரிய வருகின்றது.
குறித்த இளைஞர் மாற்றாற்றல் கொண்டவர் என்பதுடன் கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், உறவினர்கள் தேடி வந்தனர்.
எனினும் நீண்ட நாட்களாகியும் குறித்த இளைஞரை கண்டு பிடிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 23 ஆம் திகதி மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் மிகவும் உருக்குழைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது.
குறித்த சடலத்தை காணாமல் போன இளைஞர்களின் உறவினர்கள் பார்வையிட்டனர்.
இந்த நிலையிலே உறவினர்களினால் குறித்த சடலம் அடையாளம் காணப்பட்ட நிலையில், சடலம் வைத்திய பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும், அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது உறுதியாகவில்லை.