அவுஸ்திரேலிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய இரு வல்லுறவு குற்றச்சாட்டுகள் தொடர்பில் அந்நாட்டு அமைச்சரவையிலிருந்து இரு அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபரான கிறிஸ்டியன் போட்டர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் லிண்டா ரெய்னோல்ட் ஆகிய இருவரையும் பிரதமர் ஸ்கொட் மொரிஸன் பதவி நீக்கியுள்ளார்.
அரசின் உயர் சட்ட அதிகாரியான போட்டர் 1988 இல் தனது 17 வயதில் 16 வயதாக இருந்த சக மாணவியை வல்லுறவிற்குள்ளாக்கியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகிறார்.
மறுபுறம் தனது பாராளுமன்ற அலுவலகத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் வல்லுறவிற்கு உள்ளான நிலையில் அது பற்றிய விசாரணையை தவறாக கையாண்டதாக ரெய்னோல்ட் குற்றச்சாட்டுக்கு உள்ளானார்.
இந்த இருவரும் தொடர்ந்து அரசில் கனிஷ்ட நிலையில் நீடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றத்தில் பெண்களுக்கு அதிக இடம் அளிக்கப்படுவதாகவும் பிரதமர் அறிவித்துள்ளார்.