கடந்த நல்லாட்சியில் எந்தவொரு ஊடகவியலாளரும் பாதிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாகவும் அது உண்மை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருப்பது உண்மைக்கு புறம்பானதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த ரணில், சஜித் ஆட்சியில் அம்பாரை பள்ளிவாயல் தாக்கப்பட்ட போது அது பற்றிய செய்தியை அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பியமைக்காக அதில் பணிபுரிந்த முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் பல மாதங்கள் தனது தொழிலிருந்து அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இடை நிறுத்தப்பட்டிருந்தது திரு. சுமந்திரனுக்கு தெரியாதா என்று கேட்கிறோம். அன்று மேற்படி ஊடகவியலாளருக்கு நடந்த அநியாயத்தை உலமா கட்சி மட்டுமே பகிரங்கமாக கண்டித்திருந்தது. அதன் பின்னரே அந்த ஊடகவியலாளர் பல மாதங்களின் பின் மீண்டும் பதவியமர்த்தப்பட்டார்.
ஒரு உண்மையான செய்தியை வெளியிட்டமைக்காக ஒரு தமிழ் பேசும் ஊடகவியலாளரை பணி நீக்கம் செய்யும் மிகப்பெரும் அநியாயம் கடந்த ஆட்சியில் நடந்தது என்பதை கடந்த ஆட்சிக்கு முட்டுக்கொடுத்த சுமந்திரனுக்கு தெரியாமல் போனதா? அல்லது தெரிந்து கொண்டே இன்றைய ஜனாதிபதி கோட்டா ஆட்சியில் பழி போடுவதற்காக நல்லாட்சியை துய்மைப்படுத்த முயல்கிறாரா என்று கேட்கின்றோம்.
அது மட்டுமின்றி முக நூலை தடை செய்து மக்களின் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தியதும் தமிழ் கூட்டமைப்பு முட்டுக்கொடுத்த கடந்த அரசுதான் என்பதும் சுமந்திரனுக்கு மறந்து விட்டதா? முக நூல் மூலம் தீவிரவாதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடக்கும் வரை முகநூலை அப்படியே விட்டு விட்டு இதனை முஸ்லிம்கள் சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் முகநூலை கட்டுப்படுத்தி ஊடக சுதந்திரத்தை ஒழித்துக்கட்டியது நல்லாட்சி அரசு என்பதை சுமந்திரன் மறந்து விட்டாரா என கேட்கின்றோம் என்று தெரிவித்தார்.