தென்னமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்திய பகுதியில் கால்டாஸ் பிராந்தியத்திலுள்ள நெய்ரா நகரில் தங்க சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 20 பேர் சிக்கிக் கொண்டனர்.
தென்னமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்திய பகுதியில் கால்டாஸ் பிராந்தியத்திலுள்ள நெய்ரா நகரில் தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன.
100இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுரங்கத்துக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு சுரங்கத்தை விட்டு வெளியேறினர். எனினும் 20 தொழிலாளர்கள் சுரங்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.
சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் குவிக்கப்பட்டு மாயமான தொழிலாளர்களை உயிருடன் மீட்பதற்கான முயற்சிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.