சிங்கராஜ வனப்பகுதியில் ஹொட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளதாக வெளியான தகவலை சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மறுத்துள்ளார்.
நேற்று (27) தங்காலையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், ஹொட்டல் கட்டப்பட்டுள்ள காணி தனியாருக்கு சொந்தமானது என்றார்.
சிங்கராஜ வனப்பகுதியில் ஹொட்டல் கட்டப்பட்டுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியான போதும், உண்மையில் அந்த காணி வனப்பகுதிக்குரிய காணியல்ல என்றார்.
காணி தொடர்பான இடைக்கால அறிக்கையை பெற்றுள்ளதாகவும், அங்கு காடழிப்பு இடம்பெறவில்லையென்றும் தெரிவித்தார்.
சிங்கராஜ வனத்திலிருந்து 3.6 கி.மீ தூரத்திலும், ரக்வாணை பிரதான வீதிக்கு அருகிலும் குறிப்பிட்ட நிலம் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
அந்த பகுதியில் 135 வீடுகள் உள்ளன. அங்கு பெரிய மரங்கள் வெட்டப்பட்டதற்காக அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. சில மரங்கள் மட்டுமே வெட்டப்பட்டுள்ளன. அந்த பகுதியை வனப்பகுதிக்குள் உள்ளடக்குவதென்றால், அரசாங்கம் ஒரு கொள்கை முடிவை எடுக்க வேண்டுமென்றும், வர்த்தமானி அறிவித்தல் விடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.