சுயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கிக்கொண்ட ‘எவர் கிவன்’ கப்பலில் உள்ள 25 பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைவான் நாட்டைச் சேர்ந்த ‘எவர் கிரீன் மெரைன்’ என்ற நிறுவனம் இயக்கிவரும் ‘எவர் கிவன்’ என்ற சரக்குக் கப்பல் கடந்த 23ஆம் திகதி எகிப்தில் உள்ள சுயஸ் கால்வாயின் குறுக்காக சிக்கிக் கொண்டது.
தரைதட்டியக் கப்பலை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்தக் கப்பலில் உள்ள இந்திய பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் சரக்குகள் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்றும் அக்கப்பலின் உரிமையாளரான ஜப்பானைச் சேர்ந்த ஷோய் கிசேன் கைஷா தெரிவித்துள்ளார்.
கப்பல் சேதமடையவில்லையென்றும், சேற்றில் இருந்து மீட்கப்பட்டதும் பயணத்தை தொடர முடியுமெனறும் தெரிவித்துள்ளார்.
கப்பலின் அடிப்பகுதியிலுள்ள சேற்றை அகற்றும் பணி இரவிரவாக நடந்து வருகிறது.
இந்த நிகழ்வால் தினமும் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குள் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த எதிர்பாராத நிகழ்வுக்கு அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.
உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான ‘எவர் கிவன்’ கப்பல் 20 ஆயிரம் கண்டெய்னர்களை கொண்டு செல்லத்தக்கது.
400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் சீனாவிலிருந்து நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் மார்ச் 23 ஆம் திகதி சுயஸ் கால்வாயில் சென்று கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. இதனால் அந்தக் கப்பல் கால்வாயின் குறுக்காகத் திரும்பி மணலில் சிக்கியது.
மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் எகிப்து நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் 193 கிலோமீட்டர் (120 மைல்) நீளமான சுயஸ் கால்வாய் உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையாக விளங்குகிறது. உலக வர்த்தகத்தின் 12 சதவீதம் இந்தக் கால்வாயின் வழியாக நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்தக் கால்வாயின் குறுக்காக ‘எவர் கிவன்’ கப்பல் தரைதட்டிக் கொண்டதால் அந்த வழியாக பிற கப்பல்கள் செல்லமுடியாத நிலை உருவாகி இருக்கிறது. கிட்டத்தட்ட கால்வாயின் இருபுறம் 200இற்கும் மேற்பட்ட கப்பல்கள் செல்ல வழியின்றி நின்று கொண்டிருக்கின்றன. இதனால் தினமும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்து வருகின்றன.