தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீடு புகுந்து அவரது மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் நேற்று (26) பரபரப்பாக பேசப்பட்டது.
இதை அரசியல்ரீதியான விடயமாகவும், குழு மோதலாகவும் இருவேறு விதமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பலர் பதிவிட்டனர்.
உண்மையில் நடந்தது என்ன?
ஓரிரு தினங்களின் முன்னர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இளைய மகனின் நண்பர்களிற்கும், பிறிதொரு இளைஞர் தரப்பிற்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடே முற்றி இந்த மோதலாகியுள்ளது. 2020/2021 உயர்தர பிரிவு மாணவர்களிற்கிடையிலான மோதல் இது.
இது இனம்தெரியாதவர்கள் நடத்திய தாக்குதல் அல்ல என்பதை விசாரணையுடன் தொடர்புடைய பொலிஸ் வட்டாரங்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தன. சிறிதரனின் மகனின் நண்பர்கள் தரப்பினர், தாக்குதலாளிகளை ஏற்கனவே அறிந்திருந்தனர்.
ஏற்கனவே மைதானத்தில் நடந்த முரண்பாட்டை தொடர்ந்து, சம்பவதினத்திலும் சிறிய உரசல் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் இளைய மகனும், நண்பர்களும் கே.கே.எஸ் வீதியிலுள்ள நீலாம்பரி உணவத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, முரண்பட்ட தரப்பினரும் அங்கு சென்றுள்ளனர். அவர்கள், சிறிதரனின் மகன் உள்ளிட்ட அந்த இளைஞர் குழுவை தாக்க வந்திருக்கலாமென கருதப்படுகிறது.
நிலைமை விபரீதமாகுவதை உணர்ந்த, சிறிதரனின் இளைய மகன், தனது சகோதரனான சாரங்கனை தொலைபேசியில் அழைத்துள்ளார். சாரங்கன் அங்கு சென்று தனது சகோதரனை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
அதன்பின்னர், கடையில் நின்ற இரண்டு நண்பர்களும் தம்மையும் ஏற்றிச் செல்லும்படி தொலைபேசியில் அழைக்க, சாரங்கன் அவர்களையும் அழைத்து வந்துள்ளார். இதன்போதே அவர்கள் விரட்டி வந்து தாக்கியுள்ளனர்.
அவர்கள் சிறிதரன் எம்.பியின் மகன்களை தாக்கும் நோக்கத்துடன் வரவில்லை. சிறிதரன் எம்.பியின் இரண்டாவது மகனின் நண்பரை தாக்கவே விரட்டியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அனைவரும் இனம்காணப்பட்டுள்ளனர்.




