29.1 C
Jaffna
April 19, 2021

லைவ் ஸ்டைல்

விதவிதமான சமோசா ரெசிபி!

`காலை, மாலை வேளைகளாக இருந்தாலும் சரி, எந்தப் பருவ நிலையாக இருந்தாலும் சரி… விரும்பி சாப்பிடக்கூடியதாக விளங்குவதே சமோசாவின் தனித்தன்மை. நாவில் நீர் ஊறவைக்கும் சுவையும் வடிவமும் இதன் சிறப்பு. தெருவோர சிற்றுண்டிக் கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை இதை சுவைப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

தினம் சாப்பிட்டாலும் அலுப்பே தட்டாத சமோசாவின் சில வடிவங்களையும், அதன் மசாலா வகைகளின் செய்முறை விளக்கங்களை  பார்ப்போம்.

இனிப்பு சமோசா

தேவையானவை:

மைதா மாவு – ஒரு கப்
உப்பு – ஒரு சிட்டிகை
ஒலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை
தேங்காய்த் துருவல் – அரை கப்
பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
வறுத்த பிரெட் தூள் (Toasted bread crumbs) – கால் கப்
சர்க்கரை – அரை கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
உடைத்த நட்ஸ் (அக்ரூட், பாதாம் முந்திரி) – 2 டேபிள்ஸ்பூன் (வறுக்கவும்)
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவுடன் உப்பு, ஒலிவ் எண்ணெய், ஃபுட் கலர் சேர்த்து ஐஸ் வோட்டர் தெளித்துக் கெட்டியாகச் சப்பாத்தி மாவுப் பதத்துக்கு நன்றாக அடித்துப் பிசையவும். இதன் மேலே சிறிதளவு எண்ணெய் தடவி ஈரத்துணியில் சுற்றி அரை மணி நேரம் மூடி வைக்கவும். தேங்காய்த் துருவலுடன் பனீர் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உடைத்த நட்ஸ் வகைகள், வறுத்த பிரெட் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதுவே இனிப்புப் பூரணம்.

பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி நீளவாக்கில் சப்பாத்தியாகத் தேய்க்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, சூடானதும் இந்தச் சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் லேசாக… அதாவது அரை நிமிடம் சூடு செய்து எடுக்கவும். (முழுவதும் வேகவிடக் கூடாது). இதன்மீது ஈரத்துணியை வைத்து மூடவும் (அப்படியே வைத்தால் காய்ந்துவிடும்; சமோசா மடிக்க வராது. தேவைப்படும்போது பயன்படுத்தலாம்).

பிறகு, சப்பாத்திகளை இரண்டாக நீளவாக்கில் வெட்டவும். ஓரம் முழுவதும் தண்ணீர் தடவவும். நேர்க்கோடாக இருக்கும் பகுதியை நடுவில் கொண்டுவந்து முக்கோணம் போல் செய்து மைதா பசையால் ஒட்டவும். இதன் நடுவே சிறிதளவு இனிப்புப் பூரணம் வைத்து ஓரங்களை அழுத்தி ஒட்டி மூடவும். மீதமுள்ள சமோசாக்களையும் இதே மாதிரி தயாரிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, தயாரித்த சமோசாக்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

மினி பீச் சமோசா

தேவையானவை:

மைதா மாவு – ஒரு கப்
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்
கரம் மசாலாத்தூள் – அரை சிட்டிகை
மஞ்சள்தூள் – ஒரு சிட்டகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
சீரகத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
மைதா மாவு பசை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவுடன் உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து நன்றாக அடித்துப் பிசையவும். இதை ஈரத்துணியால் மூடி அரை மணி நேரம் ஊறவிடவும். நறுக்கிய வெங்காயத்தைச் சுத்தமான துணியில் பரப்பி அதில் உள்ள ஈரத்தன்மையை நீக்கவும். (இல்லையென்றால் சமோசா அதிகமாக எண்ணெய் குடிக்கும்). பிறகு வெங்காயத்துடன் சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பிசிறவும். மசாலா கலவை ரெடி.

மாவைச் சிறிய உருண்டைகளாக்கிச் சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்துச் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடானதும் சப்பாத்திகளைப் போட்டு லேசாகச் சுட்டு எடுக்கவும். முழுவதும் வெந்துவிடக் கூடாது. இதை ஈரத் துணியால் மூடி வைக்கவும். பிறகு ஒவ்வொரு சப்பாத்தியையும் நான்கு ரிப்பன்களாக நீளவாக்கில் மூன்று அங்குல அகலத்துக்கு நறுக்கவும். ஒரு ரிப்பனின் ஒரு மூலையில் முக்கோணமாக மடிக்கவும். இரு முனைகளும் சந்திக்கும் மூலையில் மைதா பசை தடவவும். முக்கோண பாக்கெட் கிடைக்கும். அதனுள் மசாலா கலவை சிறிதளவு வைத்து முக்கோணமாக மடிக்கவும். முடியும் இடத்தில் சிறிதளவு மைதா பசை தடவி மூடவும். எல்லா சமோசாக்களையும் இதேமாதிரி தயார் செய்யவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சமோசாக்களைப் போட்டுச் சிவக்க பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: சமோசா மடிப்பு மடிக்க முடியாதவர்கள் சாதாரண கூம்பு (பொட்டலம்) மாதிரி செய்து அதில் மசால் வைத்து அழுத்தி மூடி பொரிக்கலாம்.

க்யூப் சமோசா

தேவையானவை:

மைதா மாவு, கோதுமை மாவு – தலா ஒரு கப்
உதிர்த்த சர்க்கரை சேர்க்காத கோவா – ஒரு கப்
சூடான நெய் – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
கிராம்பு – சிறிதளவு
விதை நீக்கி, நறுக்கிய உலர் பழக்கலவை (பேரீச்சை, காய்ந்த திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, செர்ரி) – கால் கப்
சர்க்கரை – அரை கப்

செய்முறை:

மைதா மாவுடன் கோதுமை மாவு, நெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து நன்றாக அடித்துப் பிசையவும். மாவை ஈரத்துணியால் மூடி அரை மணி நேரம் அப்படியே ஊறவிடவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டுச் சூடானதும் கோவா சேர்த்து வதக்கவும், பிறகு, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து உலர் பழங்கள், சர்க்கரை சேர்த்துக் கிளறி இறக்கவும். இனிப்பு மசாலா கலவை ரெடி.

மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் தேய்த்து, செவ்வகமாக வெட்டி எடுக்கவும். ஓரங்களில் சிறிதளவு தண்ணீர் தடவவும். நடுவே இனிப்பு மசால் சிறிதளவு வைத்து வலதுபுறம் ஒருமுறை மடிக்கவும். அதன்மீது இடதுபுறம் ஒரு மடிப்பு மடித்து ஓரங்களை அழுத்தி ஒட்டவும். மேலே கிராம்பைக் குத்தவும். அதன்மீது சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவவும். மீதமுள்ள மாவையும் இதே மாதிரி செய்யவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து சமோசாக்களைப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். மொறுமொறுப்பான, க்யூப் வடிவ இனிப்பு சமோசா ரெடி.

குறிப்பு: எல்லாவித சமோசா செய்முறைக்கும் மாவு பிசையும் பதம் முக்கியம். அப்போதுதான் சமோசா நன்றாகச் செய்ய வரும். அப்படி இல்லையென்றால், ரெடிமேடாகக் கிடைக்கும் சமோசா ஷீட்ஸ் பாக்கெட் வாங்கிப் பயன்படுத்தலாம். இனிப்பு/கார மசாலா மட்டும் நாம் செய்துகொண்டால் போதுமானது.

லேயர் சமோசா

தேவையானவை:

மைதா மாவு – 2 கப்
சீரகம் – ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்)
பேக்கிங் பவுடர் – 2 சிட்டிகை
பெரிய உருளைக்கிழங்கு – 3 (வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும்)
ஃப்ரெஷ் பட்டாணி – 50 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்
பொடியாக நறுக்கிய தக்காளி – அரை கப்
பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட் – தலா 2 டேபிள்ஸ்பூன் (ஆவியில் வேகவிடவும்)
தனியாத்தூள் (மல்லித்தூள்), மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்),
கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவுடன் உப்பு, சீரகம், பேக்கிங் பவுடர், சிறிதளவு எண்ணெய் சேர்த்துப் பிசிறவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் தெளித்து நன்றாக அடித்துப் பிசையவும். இதன்மீது சிறிதளவு எண்ணெய் தடவி, அரை மணி நேரம் மூடி வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் வெங்காயம், தக்காளி, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய், வேகவைத்த காய்கறிகள், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு புரட்டவும். பிறகு மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வதக்கவும். இறுதியாக கரம் மசாலாத்தூள், மாங்காய்த்தூள் சேர்த்துப் புரட்டி, மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். இந்த மசாலாவை ஆறவிடவும்.

மாவைப் பெரிய உருண்டைகளாக்கி மெல்லிய ஓவல் வடிவ சப்பாத்திகளாகத் தேய்த்து நடுவே சரிபாதியாக நறுக்கவும். ஒரு பாதியில் சுற்றிலும் உள்ள ஓரங்களை விட்டுவிட்டு, மீதமுள்ள நடுபகுதியில் வரி வரியாகக் கத்தியால் கீறவும். பிறகு, இதன்மீது மறு பாதியை வைத்து கூம்பு / கோன் போல மடிக்கவும். அதனுள் சிறிதளவு மசாலா கலவையை வைத்து, ஓரங்களில் மைதா பசை தடவி அழுத்தி ஒட்டவும். இதே மாதிரி மீதமுள்ள மாவையும் தயார் செய்து ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து சமோசாக்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: சமோசாவுக்கு மசாலா கலவை உள்ளே நிரப்பும்போது குறைவாகவும் இருக்க கூடாது; அதிகமாகவும் இருக்கக் கூடாது. சரியான அளவாக நிரப்ப வேண்டும். ஓரங்களை நன்றாக அழுத்தி ஒட்டாவிட்டால் எண்ணெயில் போட்டதும் மசாலா பிரிந்து வெளியில் வந்துவிடும்.

ஃப்ளவர் சமோசா

தேவையானவை:

மைதா மாவு – ஒரு கப்
தினை மாவு, கோதுமை மாவு – தலா அரை கப்
தோல் நீக்கி நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப்
பனீர் துருவல் – ஒரு கப்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய தக்காளி – கால் கப்
தனியாத்தூள் (மல்லித்தூள்) – ஒரு டீஸ்பூன்
ஓமம் – அரை டீஸ்பூன்
உடைத்த முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் – சிறிதளவு
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை;

மைதா மாவுடன் தினை மாவு, கோதுமை மாவு, உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்துப் பிசிறவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் தெளித்து நன்றாக அடித்து, அழுத்திப் பிசையவும். இதன் மேலே சிறிதளவு எண்ணெய் தடவி மூடி அரை மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு சூடானதும் சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, முந்திரி, தனியாத்தூள், உப்பு, ஓமம், மிளகாய்த்தூள், பனீர் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கி ஆறவிடவும். பனீர் மசாலா ரெடி.

மாவைச் சிறிய உருண்டைகளாக்கி மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்த்துச் சதுரமாக வெட்டவும், சதுரத்தின் நான்கு ஓரங்களையும் உட்புறமாக மடிக்கவும். பிறகு, அப்படியே பின்புறம் திருப்பவும். அதன் நடுவில் சிறிதளவு பனீர் மசாலாவை வைத்து ஓரங்களில் நீரைத் தடவவும். அதே பக்கமுள்ள நான்கு முனைகளையும் உட்புறமாக மடித்து மசாலாவை மூடி அழுத்தி ஒட்டவும். கீழே உள்ள நான்கு மடிப்பு இதழ்களை விரித்து முனைகளை இலை மாதிரி நுனியை அழுத்திவிட்டால் பூ வடிவ சமோசா ரெடி (படம் பார்த்துப் புரிந்துகொள்ளவும்). எல்லாவற்றையும் இதே மாதிரி செய்துகொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், அடுப்பை சிறு தீயில் வைத்து சமோசாக்களைப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பார்க்க அழகாகவும், வித்தியாசமாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கும் இந்த சமோசா. விரும்பிய சாஸுடன் பரிமாறலாம்.

விசிறி சமோசா

தேவையானவை:

மைதா மாவு – ஒரு கப்
அரிசி மாவு, ராகி மாவு – தலா கால் கப்
ஓம நீர் – மாவு பிசைய தேவையான அளவு
முளைகட்டிய பச்சைப் பயறு – அரை கப்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – கால் கப்
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி விழுது – அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய தக்காளி – 2 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலைப் பொடி – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவுடன் அரிசி மாவு, ராகி மாவு, உப்பு, சிறிதளவு எண்ணெய்விட்டுக் கலக்கவும். அதனுடன் ஓம நீர் சேர்த்து நன்றாக மிருதுவாக அடித்துப் பிசையவும். மாவின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி ஈரத்துணியால் மூடி அரை மணி நேரம் ஊறவிடவும். முளைகட்டிய பச்சைப் பயறை ஆவியில் வேகவைத்து எடுத்து மிக்ஸியில் கொரகொரவென அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி விழுது, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்த பயறு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். இறுதியாக வேர்க்கடலைப் பொடி தூவி இறக்கி ஆறவிடவும்.

மாவைச் சிறிய உருண்டைகளாக்கவும். ஓர் உருண்டையை வட்டமாக மெல்லிய சப்பாத்தியாகத் தேய்க்கவும். மற்றோர் உருண்டையை ஓவல் வடிவமாகத் தேய்க்கவும். ஓவல் வடிவ சப்பாத்தியை விசிறிக்கு மடிப்பது போல மடிக்கவும். வட்ட வடிவ சப்பாத்தியின் நடுவில் சிறிதளவு மசாலா வைக்கவும். ஓரங்களில் தண்ணீர் தடவவும். அதன்மீது விசிறி மடிப்பு மாவை வைத்துச் சுற்றிலும் அழுத்தி ஒட்டி மூடவும். அனைத்தையும் இதே மாதிரி செய்துகொள்ளவும்
(படம் பார்த்துப் புரிந்துகொள்ளவும்). வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், அடுப்பைச் சிறுதீயில் வைத்து விசிறி சமோசாக்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சூடாக சாஸ், சட்னியுடன் பரிமாறவும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

அசைவ பெயர்… அசைவ சுவை… ஆனால் அத்தனையும் சுத்த சைவ சமையல்!

Pagetamil

உங்கள் குழந்தைகள் இரவு நேரத்தில் படுக்கையில் சிறுநீர் கழிக்கின்றார்களா…

Pagetamil

ஆண்- பெண் இருவருக்குமே ரொம்ப பிடிக்கும் உடலுறவு முறைகள்! .

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!