வழக்கை முடித்து வைத்து சூப்பர் அதிகாரியாகும் ஆசையில் வெடிகுண்டுகளை நானே வைத்தேன் என சச்சின் வாசே பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிரபல தொழில் அதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானியின் அன்டிலா வீடு தென்மும்பை பகுதியில் அமைந்து உள்ளது. இந்த வீட்டின் அருகே கடந்த மாதம் 25ஆம் திகதி வெடிப்பொருட்களுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் அந்த காரின் உரிமையாளர் ஹிரன் மன்சுக் இந்த மாத தொடக்கத்தில் தானே கழிமுகத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்திற்கும், போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேவை கைது செய்து உள்ளது மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போலீசார் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
என்.ஐ.ஏ., வழக்கு தொடர்பாக ஏற்கனவே உதவி கமிஷனர் உள்பட போலீசாரின் வாக்குமூலங்களை பெற்று இருந்தனர். இதனை தொடர்ந்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் தென்மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சச்சின் வாசேவின் குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் சோதனை நடத்தினர். சோதனையின் போது வழக்கு தொடர்பான ஆவணங்கள், மடிக்கணினி, ஐ-பாட், செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்கனவே இனோவா கார் ஒன்றை பறிமுதல் செய்து இருந்தனர். பின்னர் அதிகாரிகள், மெர்சிடஸ் பென்ஸ் கார் ஒன்றையும் பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, வெடிப்பொருட்களுடன் நிறுத்தப்பட்ட ஸ்கார்பியோ காரை பின்தொடா்ந்து வந்து, பின்னர் அதில் இருந்த டிரைவரை ஏற்றி சென்ற கார் என கூறப்படுகிறது.
இதேபோல வெடிப்பொருட்களுடன் கண்டெடுக்கப்பட்ட கார், சச்சின் வாசேவிடம் இருந்ததாக ஹிரேன் மன்சுக்கின் மனைவி குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்படும் வகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி, வெடிகுண்டுகளை (அன்டிலியா வீடு அருகே) நானே வைத்தேன். இதனால், இந்த வழக்கில் புலனாய்வு அதிகாரியாக செயல்பட்டு, வெற்றிகரமாக முடித்து வைத்து சூப்பர் அதிகாரியாக விரும்பினேன் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சச்சின் வாசே பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை என்.ஐ.ஏ. வட்டாரம் தெரிவித்து உள்ளது.
இதேபோன்று, வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் வாசேவின் உடன் பணிபுரியும் குற்ற நுண்ணறிவு பிரிவின் அதிகாரி ஒருவர் அப்ரூவர் ஆக மாறிவிட்டார் என்று வெளியான தகவலில் உண்மை இல்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இறுதி கட்டத்திலேயே ஒருவரை அப்ரூவராக ஆக்கும் முடிவு மேற்கொள்ளப்படும் என்றும் என்.ஐ.ஏ. வட்டாரம் தெரிவித்து உள்ளது.




