யாழ் நகரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து, சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, யாழ் நகரின் ஒரு பகுதி முடக்கப்படுகிறது.
யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் இன்றையதினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகரின், பண்ணை சுற்றுவட்டத்தில் இருந்து முட்டாசுக்கடை சந்தி வரையான காங்கேசன்துறை வீதியின் இரு மருங்கு கடைகளும், வைத்தியசாலை வீதியில் சிவன் பண்ணை சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதி வரையான இரு மருங்கு கடைகளும், முனீஸ்வரன் வீதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும், கஸ்தூரியார் வீதி, பழைய தபாலக வீதிகளிலுள்ள இரு மருங்கு கடைகளும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படும்.
யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகள் மட்டும் 10 நாள்களுக்கு இடைநிறுத்தப்படுகிறது.
மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுகின்றன. வீடுகளில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் வீடுகளில் நடத்த அனுமதிக்கப்படும்.
உயிரிழந்தோரின் இறுதிக் கிரிகைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.
அத்துடன், யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு, பேருந்து சேவைகளையும் இடமாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம், மற்றும் பண்ணை பகுதியிலிருந்து பேருந்து சேவைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
10 நாட்களிற்கு இந்த நடைமுறை நீடிக்கும்.
எனினும், இந்த பகுதிகளிலுள்ள வங்கிகளை மூட முடியாதென வடக்கு சுகாதார வைத்திய பணிப்பாளர் தெரிவித்தார். அரச கொள்கையின் படி அதை மூட முடியாது என அவர் தெரிவித்தார்.
இதற்கு, வர்த்தகர் சங்கம் சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில், அதிகாரிகளின் நடவடிக்கைக்கு தாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக குறிப்பிட்டனர். எனினும், இந்த நடவடிக்கையால் எந்த பலனும் கிடைக்காதென்பதை சுட்டிக்காட்டினர். அந்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும், பணியாளர்களும் அந்த பகுதியில் வசிப்பவர்கள் அல்ல. முடக்கப்படும் பகுதியில் எந்த குடியிருப்பாளர்களும் குடியிருக்கவில்லையென்பதை சுட்டிக்காட்டினர்.
இந்த பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்கள், வங்கிகளை திறக்க அனுமதித்து, தனியார் வர்த்தக நிலையங்களை மூட நடவடிக்கையெடுப்பதால் என்ன பலன் ஏற்படும்? வங்கிகளை திறக்க அனுமதித்து, வர்த்தக நிலையங்களை மூடுவதால் வர்த்தகர்களிற்கு ஏற்படும் பாதிப்புக்களையும் வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் எடுத்துக் கூறினர்.
எனினும், 10 நாளுக்கு இந்த நடைமுறை நீடிக்குமென அதிகாரிகள் தெரிவித்தனர்.




