24.4 C
Jaffna
January 28, 2025
Pagetamil
ஆன்மிகம்

‘உங்கள் நட்சத்திரங்கள்… வரம் அருளும் தெய்வங்கள்’- 01

♦ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்

இப்பொழுது முதல் ‘உங்கள் நட்சத்திரங்கள்… வரம் அருளும் தெய்வங்கள்’ எனும் கட்டுரைத் தொடர் மூலமாக, ஜோதிடம் குறித்த தகவல்களை, உங்கள் நட்சத்திர குணாதிசயங்களை, உங்களுக்கு வரம் அருளும் தெய்வங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் தொடர் மூலமாக, அனைத்து நட்சத்திர அன்பர்களுக்கான முழு விவரங்களையும் உங்களுக்கு வழங்க இருக்கிறேன்.

அண்டத்தில் இருப்பதே, பிண்டத்திலும் இருக்கிறது என்பது முன்னோர்கள் வாக்கு. அதன்படி வானவியலும் மனித வாழ்வியலும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை என்பதை உணர்த்த, கோள்களின் அசைவுகளைக் கணக்கிட்டு, மனித வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை தொடர்புபடுத்தினர். நம் கண்களுக்கு தெளிவுற புலப்படும் இரண்டு கிரகங்கள் சூரியன் மற்றும் சந்திரன். இதன் நகர்வுகளை அறிய கீழ்கண்ட ஐந்து முக்கிய காரணிகளை வகுத்தனர், அதற்கு தமிழில் ஐந்திறம் என்றும், வடமொழியில் பஞ்சாங்கம் என்றும் பெயர்.

⦁ நட்சத்திரம் – வானில் சந்திரன் பயணிக்கும் 27 நட்சத்திரங்கள்
⦁ வாரம் – ஏழுநாட்களைக் கொண்டது ஒரு வாரம்.
⦁ திதி – சூரிய மற்றும் சந்திரனுக்கு இடையே இருக்கும் தொலைவு
⦁ கரணம் – திதியின் சரிபாதி
⦁ யோகம் – ஒவ்வொரு நட்சத்திரத்தையும் சந்திரன் கடக்கும் காலம்

மேற்கண்ட ஐந்து காரணிகளில் மக்களிடையே பிரசித்தி பெற்றதும், பரிச்சயமானதும் நட்சத்திரங்களாகும். வானத்தில் கணக்கிலடங்காத நட்சத்திர மண்டலங்கள் இருப்பினும், நமது ஜோதிடத்தில் 27 நட்சத்திர மண்டலங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

ஜோதிடம் புவிமையக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்பதால், சந்திரன் உட்புகுந்து பயணிக்கும் நட்சத்திர மண்டலங்களையே பிரதானமாகக் கருதப்படுகிறது. நட்சத்திர மண்டலங்களை ஒன்பது பாதங்களாகவும் அவற்றை 12 ராசி மண்டலங்களாகவும் வரையறுத்தனர். ஒவ்வொரு ராசி மண்டலத்திலும் சந்திரன் பயணிக்கும்போது, வானில் தெரியும் வடிவத்தைக் கொண்டு அதற்கு தகுந்தது போலவே பெயரிட்டனர். அதற்கு உரிய அதிதேவதைகளையும் வகுத்துக் கொடுத்தனர்.

நட்சத்திரங்களும் அதிதேவதைகளும்

1. அஸ்வினி – சரஸ்வதி.
2. பரணி – துர்கை.
3. கார்த்திகை – அக்னி.
4. ரோகிணி – பிரம்மா.
5. மிருகசீரிடம் – சந்திரன்.
6. திருவாதிரை – ருத்திரன்
7. புனர்பூசம் – அதிதி.
8. பூசம் – பிரகஸ்பதி
9. ஆயில்யம் – ஆதிசேஷன்
10. மகம் – ராஜராஜேஸ்வரி.
11. பூரம் – பார்வதி.
12. உத்திரம் – சூரியன்.
13. அஸ்தம் – ஐயப்பன்.
14. சித்திரை – விஷ்வகர்மா.
15. சுவாதி – வாயு.
16. விசாகம் – முருகன்.
17. அனுஷம் – லட்சுமி.
18. கேட்டை- இந்திரன்.
19. மூலம் – நைருதி
20. பூராடம் – வருணி
21. உத்திராடம் – சிவன்.
22. திருவோணம் – மகாவிஷ்ணு .
23. அவிட்டம் – வசுக்கள் .
24. சதயம் – லிங்கோத்பவர்.
25. பூரட்டாதி – குபேரன்.
26. உத்திரட்டாதி – காமதேனு.
27.ரேவதி – அரங்கநாத பெருமாள்

நட்சத்திரங்களும் அதிபதிகளும்

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் நட்சத்திரமே அவருடைய ஜென்ம நட்சத்திரம். இந்த நட்சத்திரப் பெயர் கொண்டே கோயிலில் அர்ச்சனை செய்கிறோம். ஜென்ம நட்சத்திரம் குறித்து ஜோதிடம் சொல்வதென்ன? இதை அறிய முதலில் 27 நட்சத்திரங்கள் மற்றும் அதன் அதிபதிகளைப் பற்றி அறிய வேண்டும்.

மூன்று நட்சத்திரங்களுக்கு ஒரு அதிபதி என்று 27 நட்சத்திரங்களுக்கு ஒன்பது அதிபதிகள் வகுத்தனர். ஜாதகரின் திசை புத்திகள் ஜென்ம நட்சத்திர அதிபதியிடம் இருந்தே தொடங்குகிறது. உதாரணமாக பூராட நட்சத்திரத்தில் ஒருவர் பிறந்திருந்தால், அவருக்கு தொடங்கும் முதல் திசை பூராட நட்சத்திரத்தின் அதிபதியான சுக்கிர திசையே ஆகும்.

முற்பிறவியில் ஒருவர் எந்த கிரக திசாவில் மரணமடைகிறாரோ, அந்த திசா நாதனை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரத்தில் பிறப்பெடுக்கிறார். இதுவே நமது ஜென்ம நட்சத்திரம் உணர்த்தும் ரகசியம். ஆக, முற்பிறவியில் மரணமடைந்தபோது இருந்த திசையே இந்தப் பிறவியிலும் தொடர்கிறது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

நமது ஜென்ம நட்சத்திரம் கூறும் ரகசியம்

இறக்கும் தருணத்தில் நடக்கும் கிரக திசா நாதனுக்குரிய மூன்று நட்சத்திரங்களில், எந்த நட்சத்திரத்தில் அடுத்த பிறவி நிகழ வேண்டும் என்று அவனது பிராப்த கர்மாவே நிர்ணயம் செய்கிறது.

முற்பிறவியில் இருந்து தொடரும் கர்ம வினைகளைத் தாங்கி பிறக்கும் ஆத்மா, தன் பயணத்தை ஜென்ம நட்சத்திரத்தில் இருந்தே பிறப்பெடுத்து தொடங்குகிறது. இவ்வாறாக பிராப்த கர்ம வினையின் தொடக்கம் உங்கள் ஜென்ம நட்சத்திரமே கோடிட்டுக் காட்டிவிடுகிறது. இதைப் பற்றி ஆழமாக அறிந்து கொள்ள நட்சத்திர வடிவங்கள் பற்றி அறிவது முக்கியம். நட்சத்திரத்திற்கு சமஸ்கிருதத்தில் தாரா அல்லது தாரை என்று பெயர். எனவே நட்சத்திர வடிவங்களை தாரை வடிவங்கள் என்று அழைக்கலாம்.

உங்கள் பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக்கொண்டே வரும் ஒன்பது நட்சத்திரங்கள் ஜென்ம தாரை மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. ஜென்ம தாரை மண்டலம் தற்போது நாம் எடுத்திருக்கும் பிறவிக்கான வழிபாடுகள் பற்றி அழகாகவே சொல்லி வைத்திருக்கின்றன. அதற்கு அடுத்து வரும் ஒன்பது நட்சத்திரங்கள் அனு ஜென்ம தாரை மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. இவை சஞ்சித கர்மா என்று அழைக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் கர்ம வினைகளால் ஏற்படும் அசுப நிகழ்வுகளை எவ்வாறு தெய்வ வழிபாடுகள் மூலம் கையாளலாம் என்பதைக் கூறுகிறது. மீதம் இருக்கும் ஒன்பது நட்சத்திரங்கள் திரி ஜென்ம தாரை மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. இவை உங்கள் முற்பிறவி கர்ம வினைகளால் ஏற்படும் அசுப நிகழ்வுகளை எவ்வாறு தெய்வ வழிபாடுகள் மூலம் கையாளலாம் என்பதை விவரிக்கிறது.

தாரை வகைகள்

ஜென்ம/அனு ஜென்ம/திரி ஜென்ம தாரை மண்டலத்தில் இருக்கும் ஒன்பது நட்சத்திரங்கள் கீழ்க்கண்ட ஒன்பது வகைகளாக பிரிக்கப்படுகிறது.

⦁ ஜென்ம தாரை – பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக் கொண்டே வரும் 1, 10, 19 நட்சத்திரங்கள்
⦁ சம்பத்து தாரை – பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக் கொண்டே வரும் 2, 11, 20 நட்சத்திரங்கள்
⦁ விபத்து தாரை – பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக் கொண்டே வரும் 3, 12, 21 நட்சத்திரங்கள்
⦁ சேம தாரை – பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக்கொண்டே வரும் 4, 13, 22 நட்சத்திரங்கள்
⦁ பிரதியக்கு தாரை – பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக் கொண்டே வரும் 5, 14, 23 நட்சத்திரங்கள்
⦁ சாதக தாரை – பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக் கொண்டே வரும் 6, 15, 24 நட்சத்திரங்கள்
⦁ வதை தாரை – பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக்கொண்டே வரும் 7, 16, 25 நட்சத்திரங்கள்
⦁ மித்ர தாரை – பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக் கொண்டே வரும் 8, 17, 26 நட்சத்திரங்கள்
⦁ பரம மித்ர தாரை – பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக் கொண்டே வரும் 9, 18, 27 நட்சத்திரங்கள்

சுபம் தரும் தாரைகள்

⦁ ஜென்ம தாரை (50 % சுபம்)
⦁ சம்பத்து தாரை
⦁ க்ஷேம தாரை
⦁ சாதக தாரை
⦁ மித்ர தாரை
⦁ பரம மித்ர தாரை

அசுபம் தரும் தாரைகள்

⦁ விபத்து தாரை
⦁ பிரதாயக்கு தாரை
⦁ வதை தாரை

பனிரெண்டு ராசிகளுக்கு வடிவங்கள் இருப்பது போல, இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் வடிவங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரமும் அதன் வடிவங்களும் தனித்தன்மை வாய்ந்தவை. வானில் தெரியும் ஒவ்வொரு நட்சத்திர வடிவத்தையும் ஒவ்வொரு தெய்வ உருவத்துடன் தொடர்புபடுத்தி அல்லது புராணத்தினுள் புகுத்தி, அவற்றுக்கு தகுந்தது போல் வழிபாடுகளையும் வாழ்வியல் முறைகளையும் சூட்சுமமாக வரையறுத்துக் கொடுத்துள்ளனர் ஜோதிட சாஸ்திர விற்பன்னர்கள்.

புராண உதாரணங்கள்

உதாரணமாக, ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரமான ஸ்ரீராமரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம். வானில் வில் போன்ற வடிவத்தில் புனர்பூச நட்சத்திரம் தோற்றமளிக்கும். ஆகவே ஸ்ரீராமர் எப்பொழுதும் அவரது ஜென்ம நட்சத்திர (ஜென்ம தாரை) புனர்பூச வடிவமான வில் வைத்திருப்பதாக ராமாயணம் எடுத்துரைக்கிறது.

இன்னொரு உதாரணம்… மகாபாரதத்தில் யுதிஷ்டரன் எனும் தருமன் பிறந்த நட்சத்திரம் கேட்டை. வானில் ஈட்டி போன்ற வடிவத்தில் கேட்டை நட்சத்திரம் தோற்றமளிக்கும். ஆகவே தருமன் தனது ஜென்ம நட்சத்திர (ஜென்ம தாரை) கேட்டை வடிவான ஈட்டி எறிவதில் வல்லவனாகத் திகழ்ந்தார் என்கிறது மகாபாரதம்.

புராண காலங்களில் குருகுலத்தில் அவரவர் சுப தாரை வடிவங்களை எவ்வாறு வாழ்க்கையில் உபயோகப் படுத்தலாம் என்பதும் மற்றும் சுப தாரை வடிவங்களுக்கு ஏற்ற தெய்வ வழிபாடுகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதும் போதிக்கப்பட்டுள்ளது.

’உங்கள் நட்சத்திரங்கள்… வரம் அருளும் தெய்வங்கள்’ எனும் இந்தக் கட்டுரைத் தொடரில், உங்கள் நட்சத்திரங்களுக்கு ஏற்ற சுப தாரை வடிவங்களையும் அதற்கு உரிய தெய்வங்களையும் வழிபாடுகளையும் விரிவாகப் பார்க்கலாம்.

– தொடரும்-

What’s your Reaction?
+1
2
+1
2
+1
1
+1
7
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

தனுசு ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

விருச்சிகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

Leave a Comment