இலங்கையில் தமிழர்களே ஆதிக்குடிகள் என்பது உள்ளிட்ட கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணித் தலைவர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (23) கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகலவுக்கு பீ அறிக்கை ஊடாக அறிக்கை சமர்ப்பித்து விசாரணை விபரங்களை அறிவித்தது.
சட்டத்தரணி தர்ஷன வேரதுவகே அளித்த முறைப்பாடு ஒன்றுக்கு அமைவாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத தடை சட்டம், ஐ.சி.ஐ. பி. ஆர். எனப்படும் சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டம் ஆகியவற்றின் கீழும் தண்டனை சட்டக் கோவை விதிவிதாங்களின் கீழும் இவ்விசாரணைகள் இடம்பெறுவதாக சி.ஐ.டி.யினர் நீதிவானுக்கு அறிவித்தனர்.
கடந்த ஓகஸ்ட மாதம் தொலைக்காட்சியொன்றிற்கு பேட்டியளித்த விக்னேஸ்வரன், இலங்கையில் ஆதிக்குடிகள் தமிழர்களே, விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பல்ல, முள்ளிவாய்க்காலில் பெருமளவான மக்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர், வடக்கு கிழக்கில் புத்தர் சிலைகளை அமைப்பதன் மூலம் நில அபகரிப்பு இடம்பெறுகிறது என குறிப்பிட்டிருந்தார்.
விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கள் இனங்களிடையே, நாட்டில் குழப்பத்தை தோற்றுவிக்கும்,தேசிய ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் என கூறி, குறித்த முறைப்பாடு சிஐடியினருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விக்னேஸ்வரன் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் ஒளிப்பதிவையும் விசாரணைக்கு ஒப்படைக்கும்படி, குறிப்பிட்ட தொலைக்காட்சியின் இயக்குனருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.