நாடளாவிய ரீதியில் இடம்பெறும் காடழிப்புக்கெதிரான போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக முல்லைத்தீவில் மூன்று கோரிக்கைகளுடன் கவனயீர்ப்பு போராடடம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது
முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடம்பெறும் காடழிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி எதிர் காலத்தில் ஏற்படப்போகும் பாரிய அழிவுகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது
நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை பத்து முப்பது மணிக்கு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடாத்த திட்டமிடப்பட்ட நிலையில் அதிகளவு வனப்பிரதேசத்தை கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு வகையிலும் இடம்பெறும் காடழிப்புக்களை நிறுத்த கோரி முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி வளாகத்துக்கு முன்பாக இன்று காலை பத்து முப்பது மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காடழிப்பால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான சித்திரங்கள் வரையப்பட்ட பதாதைகளை தங்கியவாறும் சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக குரல் கொடுக்கும் இளைஞர் யுவதிகளுக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்து,வனப்பகுதிகள் அழிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டுவாருங்கள், நீங்கள் இல்லையென்றால் யார் -இப்போது இல்லையென்றால் எப்போது ,வன அழிப்பை தடுப்போம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தங்கியவாறும் போராடடத்தில் ஈடுபட்டிருந்தனர்.