ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள் இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (23) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பு நேற்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டது. இன்று பிற்பகல் 1 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல், சிறுபான்மையினர் மீதான அடக்கமுறைகளை அடிப்படையாக கொண்டு, இந்த மாத தொடக்கத்தில், இலங்கை தொடர்பான தீர்மானத்தை இணை அனுசரணை நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்தன.
பிரிட்டன், கனடா, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி மற்றும் மொண்டினீக்ரோ ஆகிய நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்” என்ற தீர்மானத்தில், யுத்தத்தின் தீங்கு விளைவிக்கும் மரபுகளை நிவர்த்தி செய்தல், நாட்டில் ஒரு நிலையான அமைதியைக் கட்டியெழுப்புதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளது.