மன வேதனையில் இருக்கிறேன். இந்தத் தேர்தலே வேண்டாம் என்று கிளம்பிவிட்டேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்த நடிகர் மன்சூர் அலிகான், அதில் இருந்து வெளியேறி, ‘தமிழ் தேசியப் புலிகள் கட்சி’ என்ற புதிய கட்சியைக் கடந்த மாதம் தொடங்கினார். அதைத் தொடர்ந்து கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்தார்.
பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர் மார்ச் 18ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது ‘தேர்தலில் மிகப் பெரிய சவால் இருந்தாலும், துணிச்சலுடன் சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன்’ என்று தெரிவித்தார். அதையடுத்து பூங்காக்கள், மீன் மார்க்கெட், கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று, தொடர்ச்சியாகப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
இந்நிலையில் திடீரென நேற்று மாலை போட்டியிடப் போவதில்லை என்று மன்சூர் அலிகான் அறிவித்தார். இது தொடர்பாகக் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். மன வேதனையுடன் இருக்கிறேன்.
எங்கே சென்றாலும் ‘பாய், எவ்வளவு பணம் வாங்கிவிட்டீர்கள்?’ என்று தொடர்ச்சியாகக் கேட்கிறார்கள். ‘பாய் ஓட்டைப் பிரிப்பதற்காகத்தானே தேர்தலில் நிற்கிறீர்கள்?’ என்றும் கேட்கின்றனர்.
கெட்ட பெயருடன் நாம் இருக்கக் கூடாது. ஒன்றுமே புரியவில்லை. இந்தத் தேர்தலே நமக்கு வேண்டாம் என்று சென்னைக்குக் கிளம்பிவிட்டேன்“ என்று மன்சூர் அலிகான் தெரிவித்தார்.