மோட்டார் சைக்கிள் எரிபொருள் தாங்கியை திறந்து பெற்றோல் வாசனையை நுகர முற்பட்ட 7 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
தம்புள்ளை வெலமிடியாவ பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்புள்ளை வெலமிடியாவ முதன்மை பாடசாலையில் தரம் 2 இல் கல்வி கற்று வந்த சஜித் குமார முனசிங்க என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.
குறித்த சிறுவன் நேற்று பிற்பகல் தனது பாட்டியின் வீட்டிற்கு சென்று வீட்டின் முன்றலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது ஏறி எரிபொருள் தாங்கியின் மூடியை திறந்து பெற்றோல் வாசனையை நுகர்ந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் மீது மயக்கமுற்ற நிலையில் இருந்த சிறுவன் பிரதேசவாசிகளின் உதவியுடன் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (21) தம்புள்ளை பொது வைத்தியசாலையில் இடம்பெறவுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




