மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கமல் வெளியிட்டார். இதில் 70 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் புதிதாக இணைந்த கலாம் ஆலோசகர் பொன்ராஜ், சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் அதிமுக, திமுக இல்லாமல் மூன்றாவது அணியாகத் தேர்தலில் நிற்கிறது. மக்கள் நீதி மய்யத்துடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், இந்திய ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில் மநீமவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கமல் இன்று வெளியிட்டார். சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் 70 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் கமல் பெயர் இல்லை. புதிதாக இணைந்த பழ.கருப்பையா பெயர் இல்லை.
புதிதாக இணைந்த கலாம் ஆலோசகர் பொன்ராஜுக்கு அண்ணா நகர் தொகுதியும், செந்தில் ஆறுமுகத்திற்கு பல்லாவரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமிக்கு பெரம்பூர் தொகுதியும், சிநேகனுக்கு விருகம்பாக்கம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.