”அந்தக் குழந்தைகளை (போராட்டக்காரர்கள்) விட்டு விடுங்கள் என் உயிரை எடுத்து கொல்லுங்கள்” என்று பொிஸார் முன் மண்டியிட்ட மியான்மர் கன்னியஸ்திரியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க இராணுவம் மறுத்தது.
இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், இராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, இராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் ஜனாதிபதி யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் இராணுவம் வைத்தது. இதனைத் தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேபிடாவ், யாங்கூன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதன் காரணமாக இணையச் சேவை நாட்டின் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது.
மியான்மர் இராணுவத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மியான்மரில் இளம் போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
மியான்மரில் இராணுவத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் இதுவரை 50க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் மியான்மரில் வடக்கு நகரான மைட்கினாவில் இராணுவத்துக்கு எதிராகப் போராட்டங்கள் வலுவாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ”அந்தக் குழந்தைகளை (போராட்டக்காரர்கள்) விட்டுவிடுங்கள். என் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று பொலிஸார் முன் மண்டியிட்ட கன்னியாஸ்திரியின் புகைப்படம் வைரலானது.
இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த கன்னியாஸ்திரியின் பெயர் ஆன் ரோஸ் நு தவங் என்பது தெரியவந்துள்ளது.
போராட்டத்தில் பங்கேற்றது குறித்து கன்னியாஸ்திரி ரோஸ் கூறுகையில், “போராட்டக்காரர்களை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். புகை குண்டுகளை வீசினர். பொலிஸாரைக் கண்டு போராட்டக்காரர்கள் ஓடினர். நான் அவர்களது முன் மண்டியிட்டு அந்தக் குழந்தைகளைச் சுட்டு விடாதீர்கள். அவர்களை விட்டுவிடுங்கள் என்று கூறினேன். அவர்களுக்கு பதிலாக என்னைச் சுட்டுக் கொல்லுங்கள் என்று கூறினேன்” என்று தெரிவித்தார்.
A nun went down on her knees in front of policemen in a northern Myanmar town and pleaded with them to stop shooting protesters against last month’s coup https://t.co/k3TwNAB0DI 1/4 pic.twitter.com/9PASCUvTTo
— Reuters (@Reuters) March 9, 2021
கன்னியாஸ்திரி ரோஸ் அவ்வாறு கூறியதும், பொலிஸார் இருவர் அவர் முன் கைகூப்பி இங்கிருந்து சென்றுவிடுங்கள் என்று கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.